பாளையங்கோட்டை மத்திய சிறையில் 2 கைதிகள் திடீர் மோதல்


பாளையங்கோட்டை மத்திய சிறையில் 2 கைதிகள் திடீர் மோதல்
x

பாளையங்கோட்டை மத்திய சிறையில் கைதிகள் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவருக்கு கை முறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருநெல்வேலி

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தைச் சேர்ந்தவர் பிச்சைக்கண்ணு. இவருடைய மகன் தங்கபாண்டி (வயது 28). இவரை திருட்டு வழக்கில் விக்கிரமசிங்கபுரம் போலீசார் கைது செய்து, கடந்த ஜூன் மாதம் 8-ந்தேதி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

இதேபோன்று நெல்லை தச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் பழனிமுருகன் மகன் பாரத் என்ற கார்த்திக் ராஜா (19). இவர் ஜெராக்ஸ் கடையில் பூட்டை உடைத்து செல்போன், பணத்தை திருடியதாக நெல்லை சந்திப்பு போலீசார் கைது செய்து, கடந்த ஆகஸ்டு மாதம் 17-ந்தேதி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

நேற்று முன்தினம் காலையில் சிறை வளாகத்தில் விசாரணை கைதிகளான தங்கபாண்டி, கார்த்திக்ராஜா ஆகியோர் குளியலறை பகுதியில் குளிக்க சென்றனர். அப்போது வாளியை எடுத்து கொள்வதில் அவர்கள் 2 பேருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதில் வாளி உடைந்தது. இதனால் ஆத்திரமடைந்த இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். அப்போது கார்த்திக் ராஜா, தங்கபாண்டியின் இடது கையை பிடித்து முறுக்கினார். இதில் தங்கபாண்டியின் கையில் எலும்புமுறிவு ஏற்பட்டதால் அலறி துடித்தார்.

உடனே பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர்கள் ஜெயமனோகர், ஜான்ரிட் ராஜ் உள்ளிட்டவர்கள் விரைந்து சென்று, இரு கைதிகளின் மோதலையும் தடுத்தனர். கையில் படுகாயமடைந்த தங்கபாண்டிக்கு சிறையில் டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு போலீஸ் பாதுகாப்புடன் தங்கபாண்டிக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

பாளையங்கோட்டை மத்திய சிறையில் கைதிகள் மோதல் குறித்து, சிறைத்துறை அதிகாரி முனியாண்டி, பெருமாள்புரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், தங்கபாண்டி, கார்த்திக் ராஜா ஆகியோர் மீது 2 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story