ரெயிலில் எடுத்து சென்ற 2¾ கிலோ தங்கம், ரூ.35½ லட்சம் பறிமுதல்


ரெயிலில் எடுத்து சென்ற 2¾ கிலோ தங்கம், ரூ.35½ லட்சம் பறிமுதல்
x

உரிய ஆவணங்கள் இன்றி ரெயிலில் எடுத்து செல்லப்பட்ட 2¾ கிலோ தங்கம் மற்றும் ரூ.35½ லட்சம் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் பிடிபட்ட கோவையை சேர்ந்தவரிடம் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர்

ரெயிலில் சோதனை

ரெயிலில் தங்கம் கடத்தப்படுவதாக சென்னை ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சென்னை ரெயில்வே பாதுகாப்பு படை குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பூமிநாதன் தலைமையில் போலீசார் விசாகப்பட்டினம்- கொல்லம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் நேற்று முன்தினம் இரவு சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது பி.3 பெட்டியில் பயணம் செய்த கோயம்புத்தூரை சேர்ந்த அனந்த நாராயணன் (வயது 50) என்பவரின் பையை சோதனை செய்தனர்.

தங்கம், லட்சக்கணக்கில் பணம்

அதில் 2 கிலோ 728 கிராம் தங்கம் மற்றும் ரூ.35.5 லட்சம் இருந்தது. இந்த நிலையில் ரெயில் காட்பாடி ரெயில் நிலையத்துக்கு இரவு 10 மணிக்கு வந்தது. அங்கு ரெயில்வே பாதுகாப்புப்படை போலீஸ் அலுவலகத்தில் பிடிபட்டவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் அவரிடம், தங்கம் மற்றும் பணத்திற்கான உரிய ஆவணங்கள் இல்லாதது தெரியவந்தது. இதையடுத்து தங்கத்தையும், பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

தங்கம் மற்றும் பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை சென்னையைச் சேர்ந்த வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் ஒப்படைத்தனர்.

வருமான வரித்துறை விசாரணை

அதைத் தொடர்ந்து வருமான வரித்துறைத் அதிகாரிகள் நகை மற்றும் பணத்தை எடுத்து வந்த அனந்த நாராயணனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் யாரிடம் தங்கத்தையும், லட்சக்கணக்கான பணத்தையும் வாங்கினார். அதை யாருக்காக கொண்டு செல்கிறார் என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோன்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு விசாகப்பட்டினத்தில் இருந்து சேலம் சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலில் வெள்ளி பொருட்களும், லட்சக்கணக்கில் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story