2 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்
2 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
செம்பட்டு:
பயணிகளிடம் சோதனை
திருச்சி விமான நிலையத்தில் இருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் மலேசியா, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு விமானங்கள் அதிக அளவில் இயக்கப்பட்டு வருகின்றன. விமானத்தில் வரும் சில பயணிகள் தங்கத்தை கடத்தி வருவதும், அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாக உள்ளது.
இந்த நிலையில் நேற்று காலை மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து மலிந்தோ விமானம் திருச்சி வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
தங்கம் கடத்தல்
இதற்கிடையே அந்த விமானத்தில் வந்த புதுக்கோட்டையைச் சேர்ந்த பயணி ஒருவர், இருக்கையின் அடியில் தங்கத்தை மறைத்து எடுத்து வந்துள்ளார். மேலும் அந்த பயணி கொண்டு வந்த தங்கத்தை, மலிந்தோ விமான நிறுவனத்தில் பணிபுரியும், பயணிகளை கையாளும் விமான நிறுவன ஊழியர் யுவராஜ் (வயது 36) மூலம், வெளியில் கொண்டு வருவதற்காக முயற்சி மேற்கொண்டார்.
அதன்படி இருக்கையின் அடியில் மறைத்து வைத்திருந்த தங்கத்தை யுவராஜ் தனது காலணியின் அடியில் பொடி (பவுடர்) வடிவில் வைத்து வெளியே எடுத்து வர முயன்றார். இதுபற்றி மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் ஒருவருக்கு தெரியவந்ததையடுத்து, யுவராஜை தொழில் பாதுகாப்பு படையினர் சோதனை செய்தனர்.
கைது
அப்போது அவரது காலணியின் உள்பகுதியில் அணியும் சாக்சில் மறைத்து சுமார் 2 கிலோ மதிப்பிலான பவுடர் வடிவிலான தங்கத்தை வெளியில் கொண்டு வருவதற்கு முயன்றது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவரை சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவர்கள் யுவராஜை கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.