விக்கிரவாண்டி அருகேடயர் வெடித்து தாறுமாறாக ஓடிய கார் மோதி 2 பேர் சாவு
விக்கிரவாண்டி அருகே டயர் வெடித்து தாறுமாறாக ஓடிய கார் மோதி 2 பேர் உயிரிழந்தனர்.
விக்கிரவாண்டி
கடலூர் மாவட்டம் செல்லஞ்சேரியை சேர்ந்தவர் தங்கவேல் மகன் மதியழகன் (வயது 60). இவரது உறவினர், புதுச்சேரி மாநிலம் ஏம்பலம் பகுதி நத்தமேடு கிராமத்தை சேர்ந்த ரத்தினம் மகன் தண்டபாணி(50) ஆவார். இவர்கள் தங்களது சொந்த ஊரில் தனித்தனியே மளிகைக்கடை வைத்து நடத்தி வந்தனர்.
விழுப்பும் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே ராதாபுரம் வெட்டுக்காடு கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சியில் பங்கேற்க இருவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் நேற்று முன்தினம் சென்றனர். பின்னர் அன்று இரவு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை தண்டபாணி ஓட்டினார்.
தாறுமாறாக ஓடிய கார்
விக்கிரவாண்டி அருகே எம்.குச்சிப்பாளையம் என்கிற இடத்தில் வந்த போது, இவர்களுக்கு எதிரே வந்த கார் டயர் வெடித்து, தாறுமாறாக ஓடியது.
மேலும், சாலையோரம் சென்று கொண்டிருந்த தண்டபாணியின் மோட்டார் சைக்கிள் மீது கார் பயங்கரமாக மோதியது. இதில் படுகாயமடைந்த மதியழகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும், பலத்த காயமடைந்த தண்டபாணியை அங்கிருந்தவர்கள் மீட்டு, சிகிச்சைக்காக முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல், தண்டபாணி நேற்று அதிகாலை பரிதாபமாக இறந்து விட்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில், விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயக முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.