மின்னல் தாக்கியதில் 2 பேர் பலி
வாணாபுரம் அருகே மின்னல் தாக்கியதில் நுங்கு வியாபாரி, பட்டதாரி வாலிபர் பரிதாபமாக இறந்தனர்.
வாணாபுரம்
வாணாபுரம் அருகே மின்னல் தாக்கியதில் நுங்கு வியாபாரி, பட்டதாரி வாலிபர் பரிதாபமாக இறந்தனர்.
நுங்கு வியாபாரி
திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரம் அருகே உள்ள காம்பட்டு அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் முனுசாமி (வயது 50), இவர் அதே பகுதியில் கடந்த சில தினங்களாக நுங்கு வியாபாரம் செய்து வந்தார்.
இந்த நிலையில் இன்று மாலை 3 மணி அளவில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. அப்போது திடீரென மின்னல் தாக்கியதில் நுங்கு விற்பனை செய்து கொண்டிருந்த முனுசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்த தகவல் அறிந்த தண்டராம்பட்டு தாசில்தார் அப்துல் ரகூப், மண்டல துணை தாசில்தார் விஜயகுமார் ஆகியோார் வந்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் வாணாபுரம் சப்-இன்ஸ்பெக்டர் சவுந்தரராஜன் மற்றும் போலீசார் வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்த முனுசாமிக்கு மலர் என்ற மனைவியும் 2 மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பட்டதாரி வாலிபர் சாவு
வாணாபுரம் அருகே சேர்ப்பாப்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட வாக்கிலாப்பட்டு பகுதியைச் சேர்த்த வேலு என்பவரின் மகன் தினேஷ் (26), பி.எஸ்சி. பட்டதாரி. இவர் தனது தந்தையுடன் விவசாய தொழில் செய்து வந்தார்.
இந்த நிலையில் விவசாய நிலத்திற்கு சென்ற தினேஷ் வெகுநேரமாகியும் வீட்டிற்கு வராததால் அவரது தந்தை வேலு நிலத்திற்கு சென்று பார்த்த போது மின்னல் தாக்கி விழுந்து கிடந்தார்.
உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு சே.கூடலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே தினேஷ் இறந்த விட்டதாக தெரிவித்தார்.
இதையடுத்து வாணாபுரம் போலீசார் பிணத்தை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர் மழையின் காரணமாக அடுத்தடுத்து மின்னல் தாக்கி நுங்கு வியாபாரி மற்றும் பட்டதாரி வாலிபர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.