மேல்மலையனூர் அருகே லாரி-மோட்டார் சைக்கிள் மோதல்; 2 பேர் பலி தீபாவளி கொண்டாட சொந்த ஊருக்கு சென்றபோது பரிதாபம்
மேல்மலையனூர் அருகே லாரி-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 2 பேர் பலியானார்கள்.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்பட் தாலுகா அப்பேடு கிராமத்தை சேர்ந்தவர் சம்பத் மகன் மாயவன் (வயது 40). பொக்லைன் டிரைவர். இவருக்கு உதவியாளராக விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் தாலுகா பம்பக்கரை கிராமத்தை சேர்ந்த முருகவேல் மகன் அருள் (28) என்பவர் வேலை பார்த்து வந்தார்.
இவர்கள் இருவரும் தீபாவளி கொண்டாடுவதற்காக நேற்று முன்தினம் இரவு செஞ்சியில் இருந்து சேத்பட் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். மேல்மலையனூர் அருகே அன்னமங்கலம் கூட்டுசாலையில் வந்தபோது, எதிரே வேலூரில் இருந்து திருச்சி நோக்கி சென்ற லாரி இவர்கள் மீது மோதியது.
உடல் நசுங்கி பலி
இந்த விபத்தில் மாயவன், அருள் ஆகிய 2 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து தகவலறிந்த வளத்தி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, இருவரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் வளத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து புதுச்சேரியை சேர்ந்த லாரி டிரைவர் அய்யனார் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.