டிப்பர் லாரி மோதி 2 பேர் பலி
சின்னாளப்பட்டி அருகே டிப்பர் லாரி மோதி 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
திண்டுக்கல் அருகே உள்ள ஏ.வெள்ளோடு பகுதியை சேர்ந்தவர் சிதம்பரம். அவருடைய மகன் வசந்தகுமார் (வயது 25). பிளஸ்-2 வரை படித்த இவர், கூலி வேலை செய்து வந்தார். நேற்று இவர், மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள குரங்குதோப்பு பகுதியில் வசிக்கிற தனது அத்தை ஊருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் அங்கிருந்து தனது மாமன் மகன் பிரகாஷ்ராஜ் (23) என்பவரை அழைத்து கொண்டு ஏ.வெள்ளோடு நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்தார்.
மோட்டார் சைக்கிளை வசந்தகுமார் ஓட்டினார். பிரகாஷ்ராஜ், பின்னால் அமர்ந்திருந்தார். மதுரை-திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் சின்னாளப்பட்டி அருகே செட்டியப்பட்டி பிரிவு என்னுமிடத்தில் நேற்று மாலை 4½ மணி அளவில் மோட்டார் சைக்கிள் வந்து கொண்டிருந்தது. அப்போது, பின்னால் அசுர வேகத்தில் வந்த டிப்பர் லாரி ஒன்று இவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட வசந்தகுமார், பிரகாஷ்ராஜ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
ஆனால் மோதிய வேகத்தில் டிப்பர் லாரி மின்னல் வேகத்தில் அங்கிருந்து சென்று விட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த அம்பாத்துறை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
பின்னர் விபத்தில் பலியான 2 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கு காரணமான டிப்பர் லாரியை தேடி வருகின்றனர். விபத்தில் பலியான வசந்தகுமாருக்கு திருமணமாகி நந்தினி என்ற மனைவியும், 6 மாத பெண் குழந்தையும் உள்ளனர். பிரகாஷ்ராஜிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.