ரெயில் மோதி 2 பேர் சாவு
குமரி மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவத்தில் ரெயில் மோதி 2 பேர் பலியானார்கள்.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவத்தில் ரெயில் மோதி 2 பேர் பலியானார்கள்.
ரெயில் தண்டவாளத்தில் பிணம்
குழித்துறை ரெயில் தண்டவாளத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு ஆண் பிணம் கிடந்தது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் உடனே நாகர்கோவில் ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜயகுமார், பழனி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது பிணமாக கிடந்தவர் மார்த்தாண்டம் அருகே பாகோடு பகுதியைச் சேர்ந்த பால்ராஜ் (வயது 41) என்பதும், அவர் கட்டிட வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து பால்ராஜ் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் பால்ராஜ் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரெயில் மோதி இறந்தாரா? அல்லது ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? என தெரியவில்லை.
மற்றொரு சம்பவம்
இதே போல இரணியல் அருகே ரெயிலில் அடிப்பட்ட நிலையில் கல்குளம் காயக்கரை பகுதியை சேர்ந்த பிரபு (33) என்பவர் பிணமாக கிடந்தார். அவருக்கு திருமணம் ஆகவில்லை.
அவரது உடலும் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த 2 சம்பவங்கள் குறித்தும் போலீசார் தனித்தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.