மதுரை அனுப்பானடியில் ரெயில் மோதி 2 பேர் சாவு -போலீஸ் விசாரணை
மதுரை அனுப்பானடியில் ரெயில் மோதி 2 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை அனுப்பானடியில் ரெயில் மோதி 2 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2 பேர் சாவு
மதுரை அனுப்பானடி பகுதியில் உள்ள ரெயில்வே கேட் தண்டவாளத்தில் ரெயில் மோதி இறந்தநிலையில் 2 ஆண்கள் பிணமாக கிடப்பதாக ரெயில்வே இருப்பு பாதை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், இறந்தவர்களில் ஒருவர், மதுரை கீழ அனுப்பானடி பகுதியை சேர்ந்த சிவக்குமார் (வயது 43) என்பதும், அப்பள கம்பெனியில் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.
மற்றொருவர் யார் என்பது குறித்து உடனடியாக தகவல் கிடைக்கவில்லை. அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்தும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரெயில் மோதியது
இதுகுறித்து போலீசார் கூறுகையில், சிவக்குமார் மற்றும் அவருடன் அவரது நண்பர் வந்துள்ளார். அவர்கள் இருவரும் அதிக அளவு மது அருந்தி உள்ளனர். பின்னர் அவர்கள் அந்த பகுதியில் உள்ள கடைக்காரர்களிடமும் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அதன்பின்னர் அவர்கள் ஒரு கடையில் உணவு வாங்கி விட்டு தண்டவாள பகுதியில் அமர்ந்து சாப்பிட்டுள்ளனர். அப்போது, அந்த வழியாக வந்த ராமேசுவரம்- கன்னியாகுமரி ரெயில் அவர்கள் மீது மோதியதில் 2 பேரும் உயிரிழந்துள்ளனர் என்றனர்.