தேனியில் 2 கி.மீ. தூரம் அணிவகுத்த வாகனங்கள்: போக்குவரத்து நெரிசலில் ஸ்தம்பித்த சாலைகள்
தேனி நகரில் நேற்று கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு 2 கிலோ மீட்டர் தூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. போலீசாரின் பரிசோதனை முயற்சி தோல்வி அடைந்து வாகன ஓட்டிகளை பரிதவிக்க வைத்தது.
கடும் வாகன நெரிசல்
தேனி நகரில் வாகன போக்குவரத்து அதிகரிப்பு காரணமாக தினமும் காலை, மாலை நேரங்களில் வாகன நெரிசல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை 5.30 மணியளவில் தேனி நகரில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கம்பம் சாலை, மதுரை சாலை, பெரியகுளம் சாலைகளில் வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன. இரவு 7 மணியளவில் வாகனங்கள் ஊர்ந்து கூட செல்ல முடியாத அளவுக்கு சாலைகள் ஸ்தம்பித்தன.
ஆம்புலன்சுகளும் இந்த நெரிசலில் சிக்கின. பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவ, மாணவிகள் வந்த பஸ்களும் நெரிசலில் சிக்கின. நேரு சிலை சிக்னலில் இருந்து கம்பம் சாலையில் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன. திடீர் வாகன நெரிசலுக்கான காரணம் புரியாமல் வாகன ஓட்டிகள் பரிதவித்தனர்.
சோதனை முயற்சி
அதே நேரத்தில், தேனி நகரில் நெரிசலை குறைக்கவும், போக்குவரத்து சீரமைப்பு பணிகளுக்காகவும் போலீசார் மேற்கொண்ட பரிசோதனை முயற்சியே இந்த கடுமையான போக்குவரத்து நெரிசலுக்கு காரணமாக இருந்தது. பஸ் நிலையத்துக்குள் பஸ்கள் வந்து செல்வதிலும், கம்பம் சாலை, பெரியகுளம் சாலை வழியாக நகருக்குள் வந்த வாகனங்களின் வழித்தடத்தை மாற்றியது என சில பரிசோதனை முயற்சிகளை மாலை நேரத்தில் போலீசார் செய்து பார்த்தனர்.
ஆனால், முன்னறிவிப்பு எதுவுமின்றி மேற்கொண்ட பரிசோதனை முயற்சி விஷப்பரீட்சையாக மாறி, வாகன ஓட்டிகளை வேதனை அடையச் செய்யும் அளவுக்கு கடுமையான போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியது.
திண்டுக்கல்-குமுளி புறவழிச்சாலை
இதையடுத்து அந்த பரிசோதனை முயற்சியை போலீசார் கைவிட்டு, போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதனால், இரவு 8 மணியை கடந்த போதிலும் போக்குவரத்து நெரிசல் குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. தேனி நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க 35 ஆண்டுகளுக்கு முன்பே திட்டச்சாலைகள் தேவை என்று திட்டமிடப்பட்டது. நகரில் திட்டச்சாலைகள் அமைக்கப்பட்ட போதிலும் அவை முழுமையாக பயன்பாட்டுக்கு வரவில்லை.
அதுபோல், திண்டுக்கல்-குமுளி புறவழிச்சாலையும் இன்னும் திறக்கப்படவில்லை. எனவே, நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க திட்டச்சாலைகள், புறவழிச்சாலைகளை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது.