வெண்ணந்தூர் அருகே பரிதாபம்: டிராக்டர் கவிழ்ந்து 2 பெண்கள் பலி-டிரைவர் படுகாயம்
வெண்ணந்தூர் அருகே டிராக்டர் கவிழ்ந்து 2 பெண்கள் பரிதாபமாக இறந்தனர். மேலும் டிராக்டர் டிரைவர் படுகாயம் அடைந்தார்.
வெண்ணந்தூர்:
மண் அள்ளும் பணி
நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அருகே உள்ள அளவாய்ப்பட்டி தாசங்காடு பகுதியை சேர்ந்தவர் குமார். இவருடைய மனைவி கவிதா (வயது 42). நடுப்பட்டி தேவேந்திரர் தெருவை சேர்ந்தவர் சம்பத்குமார் மனைவி செல்வி (38). நேற்று காலை கவிதா, செல்வி ஆகியோர் தச்சங்காடு பகுதியில் விஜயராகவன் என்பவருக்கு சொந்தமான பட்டா நிலத்தில் மண் அள்ளி, டிராக்டரில் ஏற்றி கொண்டிருந்தனர்.
பின்னர் மதியம் வேலையை முடித்து விட்டு, அவர்கள் டிராக்டரின் பின்னால் அமர்ந்து வெண்ணந்தூருக்கு மண் இறக்க சென்றனர். டிராக்டரை நடுப்பட்டி தேவேந்திரர் தெருவை சேர்ந்த சுப்பிரமணி (40) ஓட்டி சென்றார்.
2 பெண்கள் பலி
டிராக்டர் அங்கு பள்ளத்தில் இருந்து மேடான பகுதியில் ஏறியது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர், நிலைதடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் கவிதா, செல்வி ஆகியோர் மண்ணில் புதைந்தனர். சுப்பிரமணி படுகாயம் அடைந்தார். இதை பார்த்து அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் வெண்ணந்தூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
சிறிது நேரத்துக்கு பிறகு அவர்கள் கவிதா, செல்வி, சுப்பிரமணி ஆகியோரை மீட்டனர். அப்போது தலையில் பலத்த காயம் அடைந்த கவிதா சம்பவ இடத்திலேயே பலியானது தெரியவந்தது. மேலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட செல்வி, சுப்பிரமணி ஆகியோர் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி செல்வி பரிதாபமாக இறந்தார். சுப்பிரமணிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சோகம்
இதனிடையே சம்பவம் நடந்த இடத்துக்கு சென்ற வெண்ணந்தூர் போலீசார் கவிதா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்து போன கவிதாவுக்கு மோகன்ராஜ், விஜயராஜ் என்ற 2 மகன்களும், செல்விக்கு 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர்.
வெண்ணந்தூர் அருகே டிராக்டர் கவிழ்ந்து 2 பெண்கள் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.