செம்பட்டி அருகே வாகனம் மோதி மாமியார்-மருமகள் பலி


செம்பட்டி அருகே வாகனம் மோதி மாமியார்-மருமகள் பலி
x

செம்பட்டி அருகே வாகனம் மோதி மாமியார்-மருமகள் பலியானார்கள்.

திண்டுக்கல்

செம்பட்டி அருகே வாகனம் மோதி மாமியார்-மருமகள் பலியானார்கள்.

மாமியார்-மருமகள்

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே உள்ள பச்சமலையான்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி. அவருடைய மனைவி பவுன்தாய் (வயது 55) இவர்களது மகன் சஞ்சீவிகுமார். அவருடைய மனைவி விஜயசாந்தி (25).

பச்சமலையான்கோட்டை அருகே பழனிச்சாமிக்கு தோட்டம் உள்ளது. அந்த தோட்டத்தில் பூக்களை பறித்து விட்டு பவுன்தாயும், விஜயசாந்தியும் நேற்று இரவு 7 மணி அளவில் பச்சமலையான்கோட்டை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். இவர்களுடன், அதே ஊரை சேர்ந்த அனிதா (20) என்பவரும் நடந்து சென்றார்.

2 பேர் பலி

அப்போது அந்த வழியாக கேத்தையகவுண்டன்பட்டி நோக்கி சென்ற வாகனம் ஒன்று அவர்கள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் பவுன்தாய், விஜயசாந்தி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். அனிதா படுகாயம் அடைந்தார்.

அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அனிதாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து குறித்து தகவல் அறிந்த செம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் பலியான 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது தொடர்பாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார். வாகனம் மோதி மாமியார்-மருமகள் பலியான சம்பவம் செம்பட்டி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story