உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிதி உதவி


உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிதி உதவி
x
தினத்தந்தி 5 Jan 2023 12:15 AM IST (Updated: 5 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறையில் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிதி உதவி கலெக்டர் லலிதா வழங்கினார்

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டம் நடுக்கரை ஊராட்சி மேலப்பாதியை சேர்ந்தவர் சேகர். இவரது மகன் ஹரிஷ் (வயது8) அந்தபகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 30-ந்தேதி ஹரிசை விஷப்பூச்சி கடித்தது. இதில் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவனை மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 31-ந்தேதி ஹரிஷ் உடல்நிலை மோசமானதை அடுத்து அவனை திருவாரூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சிறுவனுக்கு பாம்பு கடித்து விஷம் உடலில் ஏறி விட்டதாக கூறி டாக்டர்கள் அவனை தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்ப பரிந்துரை செய்துள்ளனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஹரிஷ் இறந்தான். இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் முறையாக சிகிச்சை அளிக்காததால் சிறுவன் இறந்ததாக கூறியும், சம்பந்தப்பட்ட டாக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் சாலைமறியலில் ஈடுபட்டனர். அப்போது மாவட்ட கலெக்டர் லலிதா நேரில் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் அடிப்படையில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். நேற்று மாவட்ட கலெக்டர் லலிதா தன் விருப்ப நிதியிலிருந்து ரூ.2 லட்சத்துக்கான காசோலையினை இறந்த சிறுவனின் குடும்பத்தினரிடம் வழங்கினார். அப்போது மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பாலாஜி மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.


Next Story