சரக்கு வேனில் இருந்த ரூ.2¾ லட்சம் திருட்டு
சரக்கு வேனில் இருந்த ரூ.2¾ லட்சம் திருட்டுபோனது.
காட்டுப்புத்தூர் :
முட்டை விற்ற பணம்
நாமக்கல் சந்தைப்பேட்டைபுதூரை சேர்ந்தவர் சீனிவாசன்(வயது 45). இவர் முட்டை வியாபாரம் செய்து வருகிறார். இவர் குளித்தலையை சேர்ந்த மதர் பாஷா என்பவரை கடந்த 15 நாட்களுக்கு முன்பு டிரைவராக வேலைக்கு சேர்த்துள்ளார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர்கள் 2 பேரும் ஒரு சரக்கு வேனில் முட்டை லோடு ஏற்றிக்கொண்டு காரைக்கால் சென்றுள்ளனர். அங்கு முட்டைகளை இறக்கிவிட்டு, அதற்குண்டான தொகை ரூ.2 லட்சத்து 85 ஆயிரத்தை பெற்றுக்கொண்டு நாமக்கல் திரும்பி உள்ளனர்.
ரூ.2¾ லட்சம் திருட்டு
இரவு நேரத்தில் வேன் முசிறி வந்தபோது மதர் பாஷாவை முசிறியில் இறக்கிவிட்டு, சீனிவாசன் மட்டும் நாமக்கல் நோக்கி வேனை ஓட்டிச் சென்றுள்ளார். மைக்கல் நாயக்கன்பட்டி அருகே சென்றபோது இயற்கை உபாதைக்காக வேனை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு, சீனிவாசன் வேனில் இருந்து இறங்கி சென்றுவிட்டார்.பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது வேனில் இருந்த பணம் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். அந்த பணத்தை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இது குறித்து சீனிவாசன் கொடுத்த புகாரின் பேரில் காட்டுப்புத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.