பேக்கரி ஊழியரிடம் ரூ.2 லட்சம் மோசடி செய்த வாலிபர் கைது
தூத்துக்குடியில் குறைந்த வட்டியில் கடன் தருவதாக கூறி பேக்கரி ஊழியரிடம் ரூ.2 லட்சம் மோசடி செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடியில் குறைந்த வட்டியில் கடன் தருவதாக கூறி பேக்கரி ஊழியரிடம் ரூ.2 லட்சம் மோசடி செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
பேக்கரி ஊழியர்
தூத்துக்குடி அருகே உள்ள குறுக்குச்சாலை குமாரபுரம், மேற்கு தெருவை சேர்ந்த ராமர். இவருடைய மகன் ரமேஷ் (வயது 34). இவர் தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் உள்ள ஒரு பேக்கரியில் வேலை செய்து வருகிறார்.
கடந்த 18.9.2022 அன்று இவருடைய செல்போன் எண்ணுக்கு பெங்களூரில் இருக்கும் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து கடன் தருவதாக குறுஞ்செய்தி வந்து உள்ளது.
மோசடி
இதனை பார்த்த ரமேஷ் குறுஞ்செய்தி வந்த செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசி உள்ளார். அப்போது மகேசுவரி என்ற பெண் பேசுவதாக தெரிவித்து உள்ளார். அவர் ரமேசிடம் ரூ.3 லட்சம் கடன்; 1 சதவீதம் வட்டியில் தருவதாகவும், அதற்கு விண்ணப்ப படிவம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களை கூறி மேற்படி ரமேசிடம் இருந்து பல்வேறு தேதிகளில் மொத்தம் ரூ.2 லட்சத்து 6 ஆயிரத்து 771 பணம் வாங்கி உள்ளார். அதன்பிறகு கடன் தராமல் மோசடி செய்து உள்ளனர். இது குறித்து ரமேஷ் சைபர் குற்றப்பிரிவுக்கு ஆன்லைன் மூலம் புகார் பதிவு செய்தார்.
கைது
அதன் பேரில் தூத்துக்குடி மாவட்ட சைபர் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ரமேசிடம் மோசடி செய்தது, புதுடெல்லி சரசுவதி விகார், ஜெ.ஜெ.காலனியை சேர்ந்த மணி மகன் கார்த்திக் (36) என்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இந்த கார்த்திக் ஏற்கனவே தேனி மாவட்ட சைபர் குற்றப்பிரிவு போலீசாரால் மற்றொரு வழக்கில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட போலீசாரும் கார்த்திக்கை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.