மனநலம் பாதிக்கப்பட்டு குணமடைந்த 2 பெண்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு


மனநலம் பாதிக்கப்பட்டு குணமடைந்த 2 பெண்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு
x

மனநலம் பாதிக்கப்பட்டு குணமடைந்த 2 பெண்களை அவர்களின் குடும்பத்தினரிடம், கலெக்டர் அமர்குஷ்வாஹா ஒப்படைத்தார்.

திருப்பத்தூர்

மனநலம் பாதிப்பு

திருப்பத்தூரில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு டபேதார் முத்துச்சாமி தெரு பகுதியில் அழுக்கான ஆடைகளோடு சுற்றித் திரிந்து கொண்டிருந்த 50 வயது பெண்ணை கலெக்டர் உத்தரவின் பேரில், மீட்டு, திருப்பத்தூர் மனநல மறுவாழ்வு இல்லத்தில் அனுமதித்தனர். அவருக்கு அங்கு வழங்கப்பட்ட மருத்துவ உதவி மற்றும் மறுவாழ்வு பயிற்சியின் வாயிலாக அந்தப்பெண் அரக்கோணத்தை அடுத்த கிர்கிஸ்பேட்டையைச் சேர்ந்த செல்வம் மனைவி மாதம்மா என்பதும், 4 மகன்கள் மற்றும் ஒரு மகள் இருப்பது தெரிய வந்தது.

அதைத்தொடர்ந்து அவரது மகளுக்கு தகவல் தெரிவித்து, நேரில் வரவழைக்கப்பட்டு, அந்த பெண்ணை, அவரிடம் கலெக்டர் ஒப்படைத்தார்.

ஒப்படைப்பு

இதேபோல் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு ஊத்தங்கரை பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் சுற்றிதிரிந்த அரசி என்கிற சுதா (35) என்ற பெண்ணை ஊத்தங்கரை போலீசார் மீட்டு திருப்பத்தூரில் உள்ள மனநல மறுவாழ்வு இல்லத்தில் அனுமதித்தனர். அவருக்கு மருத்துவ உதவி வழங்கப்பட்டு நினைவு திரும்பி தனது இருப்பிடத்தை தெரிவித்தார்.

அதன்படி அவர் தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த தோளனூர் பகுதியைச் சேர்ந்த வினோத்குமாரின் தங்கை என்பதும், கணவனால் கைவிடப்பட்டவர் என்பதும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவரது சகோதரர் வினோத்குமாரை நேரில் வரவழைத்து அவரிடம் ஒப்படைக்கபட்டார். அப்போது கலெக்டர் அமர்குஷ்வாஹா 2 பேரையும் நன்றாக பார்த்து கொள்ளும்படி அறிவுரைகளை வழங்கினார்.

மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, மாவட்ட மனநல மருத்துவர் பிரபவராணி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஆர்.பாலாஜி, உதவும் உள்ளங்கள் மனநல காப்பக நிர்வாகி ரமேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story