வழிப்பறி வழக்கில் மேலும் 2 பேர் கைது
நெல்லையில் வழிப்பறி வழக்கில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
நெல்லை டவுன் ஜாமியா பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் முகமது உசைன் (வயது 30). இவர் கேட்டரிங் வேலை செய்து வருகிறார். கடந்த 30-ந்தேதி தூத்துக்குடியில் ஒரு நிகழ்ச்சியில் சமையல் வேலை முடித்துவிட்டு முகமது உசைன் அவருடைய நண்பரை சந்திப்பதற்காக பாளையங்கோட்டை அய்யா கோவில் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நபர்கள் அவசரமாக போன் பேச வேண்டும் எனக் கூறி செல்போனை வாங்கி உள்ளனர். பின் முகமது உசைன் செல்போனை திருப்பி கேட்டதற்கு தருவதாக கூறி தனியாக அழைத்து வந்து மிரட்டி ரூபாய் 8,500 பணம், வெள்ளி நகை, வெள்ளி மோதிரம் மற்றும் செல்போன் ஆகியவற்றை பறித்து சென்று விட்டனர். இதுகுறித்து முகமது உசைன் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து வெயில்முத்து, மகாராஜன் ஆகிய இருவரையும் ஏற்கனவே கைது செய்தனர். மேலும் இவ்வழக்கில் தூத்துக்குடி மாவட்டம் நாணல்காடு அம்மன் கோவில் தெருவை சேர்ந்த கொம்பையா (30) மற்றும் தூத்துக்குடி மாவட்டம் அகரத்தை சேர்ந்த இசக்கி ராஜா (19) ஆகிய இருவரையும் நேற்று கைது செய்தனர்.