மண்டைக்காடு அருகே பெட்ரோல் குண்டு வீச்சில் மேலும் 2 பேருக்கு தொடர்பு
மண்டைக்காடு அருகே தொழிலதிபர் வீட்டில் நடந்த பெட்ரோல் குண்டு வீச்சில் மேலும் 2 பேருக்கு தொடர்பு இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மணவாளக்குறிச்சி,
மண்டைக்காடு அருகே தொழிலதிபர் வீட்டில் நடந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் மேலும் 2 பேருக்கு தொடர்பு உள்ளது.
பெட்ரோல் குண்டு வீச்சு
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகங்கள், நிர்வாகிகள் வீடுகளில் நாடு முழுவதும் என்.ஐ.ஏ. மற்றும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.
இந்த சம்பவத்தை கண்டித்து தமிழகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. அதுவும் பா.ஜனதா மற்றும் இந்து அமைப்பை சேர்ந்தவர்களின் வீடுகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுகிறது.
குமரி மாவட்டத்தில் கடந்த 24-ந் தேதி இரவு மண்டைக்காடு அருகே கருமன்கூடல் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் கல்யாணசுந்தரம் (வயது 55) என்பவரது வீட்டில் மர்ம நபர்கள் 2 பேர் பெட்ரோல் குண்டுகளை வீசினர்.
மேலும் 2 பேருக்கு தொடர்பு
இந்த சம்பவம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. இதனை தொடர்ந்து 10 தனிப்படைகள் அமைத்து போலீசார் மர்மநபர்களை தேடிவந்தனர்.
இந்தநிலையில் நேற்றுமுன்தினம் பெட்ரோல் குண்டு வீசியதாக குளச்சல் பகுதியைச் சேர்ந்த முஸ்ஸாமில் என்ற ஷமில்கான் (வயது 25) என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
இந்த வழக்கில் மேலும் 2 பேருக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர்களை பிடிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதனை அறிந்த 2 பேர் தலைமறைவாகி விட்டனர். அதே சமயத்தில் மணவாளக்குறிச்சி பகுதியை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவரும் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார். அவர் பற்றிய தகவலையும் போலீசார் சேகரித்து வருகிறார்கள். விரைவில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை பிடித்து விடுவோம் என போலீசார் தெரிவித்தனர்.