வேலூர் ஜெயிலில் இருந்து மேலும் 2 கைதிகள் விடுதலை
அண்ணா பிறந்த நாளையொட்டி வேலூர் ஜெயிலில் இருந்து மேலும் 2 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.
முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணா பிறந்த நாளையொட்டி நீண்டகாலமாக ஜெயில் தண்டனை அனுபவித்து வரும் கைதிகள் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டு வருகிறார்கள்.
அதன்படி வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலில் 47 கைதிகள் நன்னடத்தை அடிப்படையில் விடுதலையாவதற்கு தகுதியானவர்கள் ஆவர். அவர்களில் 12 பேர் 2 கட்டங்களாக விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் இன்று காலை ராணிப்பேட்டை, தர்மபுரி மாவட்டங்களை சேர்ந்த மேலும் 2 கைதிகள் வேலூர் ஜெயிலில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.
அவர்கள் இருவரும் ஆயுள்தண்டனை பெற்று 14 ஆண்டுகள் தண்டனை அனுபவித்தவர்கள் ஆவார்கள். இருவரின் முன்விடுதலைக்கான ஆணைகளை வேலூர் ஜெயில் சூப்பிரண்டு அப்துல்ரகுமான் வழங்கினார்.
அவர்களுக்கு தமிழ்நாடு முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்கம் சார்பில் அரிசி, பருப்பு, எண்ணெய் மற்றும் 21 வகையான மளிகை பொருட்களை வேலூர் சரக ஜெயில் டி.ஐ.ஜி. செந்தாமரைக்கண்ணன், சங்க துணைத்தலைவர் விஜயராகவன் ஆகியோர் வழங்கினர்.
அப்போது சங்க செயலாளர் செ.நா.ஜனார்த்தனன், பொருளாளர் சீனிவாசன், ஜெயில் அலுவலர்கள் மற்றும் பலர் உடனிருந்தனர்.