வியாபாரியை கடத்திய வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது
கோவில்பட்டியில் போலீஸ் என்று கூறி வியாபாரியை கடத்திய வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டியில் போலீஸ் என்று கூறி, வியாபாரியை கடத்திய வழக்கில் மேலும் 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
பாத்திர வியாபாரி கடத்தல்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நடராஜபுரம் தெருவைச் சேர்ந்தவர் தங்கம் (வயது 62). இவர் கோவில்பட்டி- இளையரசனேந்தல் ரோடு ரெயில்வே சுரங்கப்பாதை அருகில் பாத்திரக்கடை நடத்தி வருகிறார். மேலும் பழைய இரும்பு வியாபாரமும் செய்து வருகிறார்.
இவர் கடந்த 6-8-2022 அன்று தனது கடையில் இருந்தபோது, அரசு சின்னம் பொறித்த காரில் டிப்-டாப் உடை அணிந்து 8 பேர் கொண்ட கும்பல் வந்தது. அவர்கள் தங்களை போலீஸ் என்று கூறி கொண்டு, திருட்டு பொருட்கள் வாங்கியது தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்று கூறி, தங்கத்தை குண்டு கட்டாக தூக்கி காரில் ஏற்றி கடத்தி சென்றனர்.
ரூ.20 லட்சம் கேட்டு மிரட்டி...
பின்னர் அந்த கும்பல், விருதுநகர் அருகில் காரை நிறுத்தி, தங்கத்திடம் ரூ.20 லட்சம் தந்தால் விட்டு விடுவோம் என்று கூறி மிரட்டினர். இதுகுறித்து தங்கம் தனது மகனிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். இதையடுத்து தங்கத்தின் மகன் ரூ.5 லட்சத்தை கொண்டு வந்து, அந்த கும்பலிடம் கொடுத்தார். இதையடுத்து தங்கத்தை அந்த கும்பல் விடுவித்தது.
இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, பெங்களூரைச் சேர்ந்த பரன்கவுடா, ஏசுதாஸ், டேனியல், பவுல்ராஜ், பெரோஸ்கான் ஆகிய 5 பேரை ஏற்கனவே கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்து, அவர்களிடம் இருந்த ரூ.5 லட்சத்தை மீட்டனர்.
மேலும் 2 பேர் கைது
இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த மதுரை பி.பி.குளம் முல்லை நகரைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் சின்னா என்ற ராஜபாண்டி (வயது 28), மதுரை அலங்காநல்லூர் பேசிங்காபுரம் விஷால் நகரைச் சேர்ந்த மோகன்ராஜ் மகன் தண்டபாணி (29) ஆகிய 2 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் தலைமறைவான ஒருவரை வலைவீசி தேடி வருகின்றனர்.