2 மோட்டார் சைக்கிள்கள் மோதி தீப்பிடித்ததால் பரபரப்பு


2 மோட்டார் சைக்கிள்கள் மோதி தீப்பிடித்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 30 May 2023 1:00 AM IST (Updated: 30 May 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
சேலம்

சேலத்தில் மேம்பாலத்தில் சென்றபோது 2 மோட்டார் சைக்கிள்கள் மோதி தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மோட்டார் சைக்கிளில் தீ

சேலம் அரிசிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சாரங்கன் (வயது 58). இவர், நேற்று காலை தனது மோட்டார் சைக்கிளில் சேகோ சர்வ் பகுதிக்கு சென்றுவிட்டு வந்தார். சேகோசர்வ் மேம்பாலத்தில் சாலையோரம் வண்டியை நிறுத்திவிட்டு நின்று கொண்டிந்தார்.

அப்போது ஓமலூரில் இருந்து சேலம் நோக்கி வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள், சாரங்கனின் மோட்டார் சைக்கிள் மீது மோதியதாக தெரிகிறது. மேம்பாலத்தில் 2 மோட்டார் சைக்கிளும் மோதிய வேகத்தில் பெட்ரோல் டேங்க் உடைந்து தீப்பற்றியது. இதனால் இருவரும் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

போக்குவரத்து பாதிப்பு

இதுபற்றி சூரமங்கலம் போலீசார் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அந்த வழியாக குடிநீர் லாரி வந்ததால் அதை நிறுத்தி தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

அப்படி இருந்தும் 2 மோட்டார் சைக்கிளும் முழுவதும் எரிந்து சேதமானது. மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிள்கள் மோதி தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

போலீசார் விசாரணை

விபத்து குறித்து சூரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், சாரங்கன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது, நாமக்கல் மாவட்டம் காளிப்பட்டியை சேர்ந்த வினோத்குமார் (30) என்பதும், அவருக்கு காலில் லேசான காயம் ஏற்பட்டிருப்பதும் தெரியவந்தது.

சாரங்கன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சேலத்தில் மேம்பாலத்தில் சென்றபோது 2 மோட்டார் சைக்கிள்கள் மோதி தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story