குட்கா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட 2 வடமாநில வாலிபர்கள் திருச்சி மத்திய சிறையில் அடைப்பு
குட்கா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட வட மாநில வாலிபர்கள் 2 பேர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
குட்கா பறிமுதல்
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள மதனத்தூர் போலீஸ் சோதனைச்சாவடியில் நேற்று முன்தினம் காபி கொட்டை தோல் மூட்டைகளுக்கு இடையே பதுக்கி கடத்தப்பட்ட 2 டன் எடையுள்ள குட்கா பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது.
இதையடுத்து, லாரியை ஓட்டி வந்த ராஜஸ்தான் மாநிலம் ஜாலோ மாவட்டம் சாய்ராம் கிராமம் ராம்நிவாஸ்தாகூ மகன் பக்கிரத் சிங் (வயது 24), அவருடன் வந்த அதே மாவட்டத்தை சேர்ந்த ஒட்டாவாலா கிராமத்தை சேர்ந்த ஜேம்தாஜ் என்பவரின் மகன் சோப்பாராம் (22) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
சிறையில் அடைப்பு
கடந்த 23-ந் தேதி 5 டன் எடையுள்ள குட்கா பொருட்கள் தா.பழூர் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் 2 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அரியலூரில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. மேலும் பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்கள் தா.பழூர் போலீஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதுபோல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு போலீஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் தா.பழூர் போலீஸ் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்ட வடமாநில வாலிபர்களான பக்கிரத் சிங், சோப்பாராம் ஆகியோரிடம் போலீசார் துருவி துருவி விசாரணை செய்தனர். பின்னர் அவர்கள் 2 பேரும் ஜெயங்கொண்டம் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கைது செய்யப்பட்ட 2 பேரையும் ஆகஸ்டு மாதம் 10-ந் தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் 2 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
போலி பதிவு எண்கள்
கடதலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரியின் உரிமையாளர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மகானாராம் மகன் பாபுலால் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட லாரிகள் தமிழகத்தில் ஓட்ட வேண்டும் என்பதற்காக போலியான பதிவு எண்கள் லாரிகளில் ஒட்டப்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், குட்கா பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்யும் மொத்த வியாபாரியை கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.