2 முதியவர்கள் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் 2 முதியவர்கள் தீக்குளிக்க முயன்றனர். இதனால் சம்பவம் பரபரப்பு ஏற்பட்டது.
குறைதீர்வு கூட்டம்
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் மற்றும் குறைகளை மனுக்களாக அளித்தனர்.
கூட்டத்தில், பென்னாத்தூர் அருகே உள்ள அல்லிவரம் கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் (வயது 70) என்பவர் மனு அளிக்க வந்தார். குறைதீர்வு கூட்டம் நடைபெறும் காயிதே மில்லத் அரங்கம் முன்பு திடீரென அவர் கொண்டு வந்திருந்த மண்எண்ணெய் பாட்டிலை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதைக்கண்ட போலீசார் அவரை தடுத்து நிறுத்தி மண்எண்ணெய் பாட்டிலை பறிமுதல் செய்து விசாரித்தனர். அப்போது செல்வராஜ் கூறுகையில், தனக்கு சொந்தமான நிலத்தை அரசியல்வாதிகள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து நிலத்தை மீட்டு தர வேண்டும் என்று பலரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் தீக்குளிக்க முயன்றேன் என்று கூறினார்.
தீக்குளிக்க முயற்சி
இதேபோன்று குறைதீர்வு கூட்டத்துக்கு மனு அளிக்க வந்த குடியாத்தம் அருகே உள்ள மோடிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த நாகரத்தினம் (65) என்பவர் கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் அருகே உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர் மீது தண்ணீரை ஊற்றி மீட்டு ஆசுவாசப்படுத்தி விசாரித்தனர்.
அப்போது நாகரத்தினம் கூறுகையில், மோடிக்குப்பம் கிராமத்தில் உள்ள நிலத்திற்கு வழிப்பாதை இல்லாமல் அவதிப்படுகிறேன். நீண்ட நாட்களாக வழிப்பாதை கேட்டு மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் தீக்குளிக்க முயன்றேன் என்றார். தீக்குளிக்க முயன்ற 2 பேரையும் போலீசார் எச்சரித்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
குறைதீர்வு கூட்டத்தில் 2 முதியவர்கள் தீக்குளிக்க முயன்ற சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் சிறிதுநேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.