2 மோட்டார் சைக்கிளில் கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் கைது
கோவில்பட்டியில் 2 மோட்டார் சைக்கிளில் கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 1¼ கிலோ கஞ்சா-ரூ.1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
கோவில்பட்டி:
கோவில்பட்டியில் 2 மோட்டார் சைக்கிளில் வைத்து கஞ்சா விற்ற 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1¼ கிலோ கஞ்சா மற்றும் ரூ.1 லட்சம் பறிமுதல் ெசய்யப்பட்டது.
போலீசாருக்கு தகவல்
கோவில்பட்டி மந்தித்தோப்பு ரோடு பகுதியில் சிலர் கஞ்சா விற்பதாக மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவானந்திற்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஹரி கண்ணன் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் இரவில் அந்த பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது மந்தித்தோப்பு பகுதியிலுள்ள ஒரு வீட்டின் அருகில் 2 மோட்டார் சைக்கிளுடன் 5 பேர் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்தனர். போலீசாரை பார்த்தவுடன் அவர்கள் மோட்டார் ைசக்கிளுடன் தப்பிஓட முயற்சித்துள்ளனர். போலீசார் அவர்களை சுற்றிவளைத்த 3 பேரை பிடித்தனர். இதில் 2 பேர் இருளில் ஓடி தப்பிவிட்டனர்.
கஞ்சா விற்பனை
அவர்கள் வைத்திருந்த 2மோட்டார் சைக்கிள்களில் மறைத்து வைத்திருந்த சுமார் 1¼ கிலோ கஞ்சா சிக்கியது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் 3 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். . விசாரணையில், கோவில்பட்டி ஸ்ரீராம் நகர் இருளப்பசாமி மகன் பொன் பிரகாஷ் (வயது 26), செக்கடி தெரு மாரியப்பன் மகன் ராகேஷ் சர்மா (26), ராஜீவ்நகர் பாலமுருகன் மகன் விஷ்ணு (26) என்பதும், தப்பி ஓடியவர்கள் அன்னை தெரேசா நகர் அய்யாத் துரை மகன் மகேஷ் குமார் ( 23), ஸ்ரீராம் நகர் ராமசாமி மகன் ராமகிருஷ்ணன் ( 29) என்பதும் தெரிய வந்தது. அவர்கள் மோட்டார் சைக்கிளில் வைத்து கஞ்சா விற்று வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
3 பேர் கைது
அவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள், கஞ்சா விற்று வைத்திருந்த ரூ.1 லட்சம் பணம், ஒரு பவுன்தங்க சங்கிலி ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து பொன்பிரகாஷ், ராகேஷ் சர்மா, விஷ்ணு ஆகிய 3பேரையும் கைது செய்தனர். தப்பி ஓடிய 2 பேரையும் போலீசார் தேடிவருகின்றனர்.