மதுரை கோர்ட்டில் 2 பேர் சரண்


மதுரை கோர்ட்டில் 2 பேர் சரண்
x
தினத்தந்தி 28 July 2023 12:15 AM IST (Updated: 28 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் தொழிலதிபர் கொலை வழக்கில் 2 பேர் மதுரை கோர்ட்டில் சரணடைந்துள்ளனர்.

விருதுநகர்

விருதுநகர் தொழிலதிபர் கொலை வழக்கில் 2 பேர் மதுரை கோர்ட்டில் சரணடைந்துள்ளனர்.

தொழிலதிபர் கொலை

விருதுநகர் தொழிலதிபர் குமரவேல் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் விருதுநகர் மேற்கு போலீசார் 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இதில் சம்பந்தப்பட்டவர்களை பிடிப்பதற்கு மாவட்ட போலீஸ் நிர்வாகம் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம் கண்காணிப்பில் 5 போலீஸ் தனிப்படை அமைத்துள்ளது. இந்த தனிப்படை போலீசார் மாநிலம் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே சேலம் மாவட்டம் சங்ககிரி போலீஸ் நிலையத்தில் விருதுநகரை சேர்ந்த பால்பாண்டி என்ற பவர் பாண்டி(வயது 20), சிவகாசியை சேர்ந்த செல்வம்(20) ஆகியோர் சரணடைந்தனர். இவர்களை தனிப்படை போலீசார் விருதுநகருக்கு அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும் விருதுநகர் அல்லம்பட்டியை சேர்ந்த வெங்கடேஸ்வரன், பாலமுத்துக்குமார் ஆகியோர் கொலை கும்பலுக்கு தகவல் தெரிவிப்பவர்களாக செயல்பட்டதாக தெரியவந்தது. அவர்களையும் தனிப்படை போலீசார் தங்கள் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர்.

2 பேர் கோர்ட்டில் சரண்

இந்நிலையில் தொழிலதிபர் குமரவேல் கொலை வழக்கில் போலீசார் தேடிவந்த மையிட்டான்பட்டியை சேர்ந்த சகோதரர்கள் ஞானசேகரன்(58), விக்ரமன்(56) ஆகியோர் மதுரை 6-வது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நேற்று சரணடைந்தனர். இவர்களை 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டுள்ளார். அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க விருதுநகர் மேற்கு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இதற்கிடையில் தனிப்படை போலீசார் விசாரணை வளையத்தில் கொண்டு வந்தவர்களின் தகவலின் அடிப்படையில் விருதுநகர்-சாத்தூர் ரோட்டில் எட்டூர் வட்டம் சோதனை சாவடி அருகே முட்புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தொழிலதிபர் குமரவேல் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட 2 நீண்ட வாள்களை போலீசார் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. மேலும் சரணடைந்த பால்பாண்டி, செல்வம் ஆகியோரை விசாரணை முடிந்து நேற்று இரவு போலீசார் கைது செய்து விருதுநகர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். முதல் மாஜிஸ்திரேட் கவிதா, கைதான இருவரையும் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இந்த கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் தனிப்படை போலீசாரிடம் சிக்குவார்கள் என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


Next Story