கண்டமங்கலத்தில் வீட்டில் பதுக்கி வைத்த ரூ.3 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் 2 பேர் கைது
கண்டமங்கலத்தில் வீட்டில் பதுக்கி வைத்த ரூ.3 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் பகுதியில் ஒரு வீட்டில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய்க்கு புகார் வரப்பெற்றது. இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம், போலீசார் அருணன், ஜெயபால், பாலசுப்பிரமணியன், வெங்கடாஜலம், சங்கர் ஆகியோர் கொண்ட தனிப்படையினர், கண்டமங்கலம் பகுதிக்கு விரைந்து சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் 10 சாக்கு மூட்டைகள் இருந்தது. அதை பிரித்து பார்த்தபோது 9,975 பாக்கெட்டுகளில் 150 கிலோ எடையுள்ள புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அந்த வீட்டில் இருந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள் இருவரும், கண்டமங்கலம் வாய்க்கால் மேட்டு தெருவை சேர்ந்த மகன் நசீர்அகமது (வயது 34), கமர்தீன் மகன் ஜமாலுதீன் (44) என்பதும் அவர்கள் இருவரும் புதுச்சேரியில் இருந்து புகையிலை பொருட்களை வாங்கி வந்து வீட்டில் பதுக்கி வைத்து விழுப்புரம், கண்டமங்கலம் பகுதிகளில் உள்ள கடைகளுக்கு சப்ளை செய்து வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து நசீர்அகமது, ஜமாலுதீன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த ரூ.3 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் இருவரையும் போலீசார், விழுப்புரம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.