வியாபாரியை தாக்கி பணத்தை பறித்த 2 பேர் கைது
விழுப்புரத்தில் வியாபாரியை தாக்கி பணத்தை பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனா்.
விழுப்புரம்:
விழுப்புரம் கைவல்லியர் தெரு பகுதியை சேர்ந்தவர் ஜியாவுல்ஹக் என்கிற ஹக்கீம் (வயது 39). இவர் விழுப்புரம் நகரில் உள்ள மளிகை கடைகளுக்கு சிறுதானிய பொருட்களை விற்பனை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு விழுப்புரம் எம்.ஜி.சாலையில் உள்ள கடைகளுக்கு சிறுதானிய பொருட்களை விற்பனை செய்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். அங்குள்ள பல்பொருள் அங்காடி கடை எதிரே செல்லும்போது அங்கு நின்றுகொண்டிருந்த 2 பேர் திடீரென ஜியாவுல்ஹக்கை தாக்கி அவர் வைத்திருந்த ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் ரூ.7,500-ஐ பறித்துக்கொண்டு தப்பிச்செல்ல முயன்றனர். உடனே அவர் கூச்சல்போடவே அக்கம், பக்கத்தினர் விரைந்து சென்று அவர்கள் இருவரையும் மடக்கிப்பிடித்து விழுப்புரம் மேற்கு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் காயமடைந்த ஜியாவுல்ஹக், விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
இதையடுத்து பிடிபட்ட 2 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள் இருவரும் விழுப்புரம் ஜி.ஆர்.பி. தெருவை சேர்ந்த வினோத்குமார் மகன் அபிஷேக் (வயது 19) மற்றும் நாயக்கன்தோப்பு பகுதியை சேர்ந்த 18 வயதுடைய சிறுவன் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த சிறுதானிய பொருட்கள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்.