கோவில் உண்டியலை உடைத்து நகைகளை திருடிய 2 பேர் கைது
கோவில் உண்டியலை உடைத்து நகைகளை திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
மணிகண்டம், ஆக.23-
மணிகண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) வெற்றிவேல் தலைமையிலான போலீசார் நேற்று திருச்சி-மதுரை சாலை ஆலம்பட்டி பிரிவு ரோடு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து விசாரித்ததில் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். பின்னர் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தியதில், அவர்கள் புத்தூர் மேல வண்ணாரப்பேட்டையை சேர்ந்த சிவக்குமார் மகன் ஸ்ரீகாந்த் (வயது 19), பீமநகர் பரமசிவம் மகன் விக்னேஷ் (20) என தெரியவந்தது. மேலும் இவர்கள் மணிகண்டம் அருகே அளுந்தூர் மாரியம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து நகை- பணத்தை திருடிச் சென்றதும், நவல்பட்டு பகுதியில் ஒரு கடையின் பூட்டை உடைத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதும் மற்றும் பழனி, கரூர் ஆகிய பகுதிகளில் மோட்டார் சைக்கிளை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 4 பவுன் உருக்கிய தங்க கட்டிகள் மற்றும் 2 மோட்டார் சைக்கிள்களை கைப்பற்றினர். பின்னர் அவர்களை திருச்சி ஜே.எம். 4 கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.