கள்ளச்சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது
கோத்தகிரி அருகே கள்ளச்சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோத்தகிரி
கோத்தகிரி அருகே கள்ளச்சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கள்ளச்சாராயம்
செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்த 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் கள்ளச்சாராயத்தை ஒழிக்க அதிரடி சோதனை நடத்துமாறு போலீசாருக்கு, டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவிட்டார்.
இதையடுத்து நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் அறிவுறுத்தலின்படி குன்னூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கோவிந்தசாமி தலைமையில் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அதிரடி சோதனை
இதற்கிடையில் கூட்டாடா அருகே செம்மனாரை பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகுமான் கான், யாதவ் கிருஷ்ணன், ஏட்டு அஜித், போலீஸ்காரர்கள் சரவணன், சுரேந்தர் ஆகியோர் அடங்கிய குழுவினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
கைது
அப்போது செம்மனாரை பகுதியில் வசித்து வரும் சத்தியமங்கலத்தை சேர்ந்த பெருமாள்(வயது 45), பாலன்(71) ஆகியோர் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களை கையும், களவுமாக பிடித்து போலீசார் கைது செய்தனர். மேலும் 500 லிட்டர் சாராய ஊறல், 20 லிட்டர் சாராயம் மற்றும் உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.