பட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய 2 பேர் கைது
காட்பாடியில் நடுரோட்டில் பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
கேக் வெட்டி கொண்டாட்டம்
வேலூர் மாவட்டம், காட்பாடி ஓடை பிள்ளையார் கோவில் அருகே ஒரு ஓட்டல் உள்ளது. அந்த ஓட்டலின் எதிரே கடந்த 11-ந் தேதி நள்ளிரவு 12 மணிக்கு ஓட்டலில் பணிபுரியும் பரமக்குடியைச் சேர்ந்த பூவரசன் (வயது 25) என்பவரின் பிறந்தநாளை கொண்டாட அவரது நண்பர் காட்பாடியை அடுத்த எல்.ஜி.புதூர் பகுதியைச் சேர்ந்த சிவா (21) ஏற்பாடு செய்திருந்தார்.
அப்போது நடுரோட்டில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு அதன்மேல் கேக் வைத்து பூவரசன் பட்டாக்கத்தியால் வெட்டியுள்ளார். மேலும் பட்டாசுகளை வெடித்து நடுரோட்டில் வீசி பிறந்த நாள் கொண்டாடியுள்ளார். இது வீடியோவாக பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
போலீஸ் விசாரணை
இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் காட்பாடி போலீசாருக்கு உத்தரவிட்டார்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வன் விசாரணை நடத்தினார். அப்போது, பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் ஓட்டலில் தேங்காய் வெட்டும் பட்டா கத்தியைக் கொண்டு சாலையோரத்தில் மோட்டார் சைக்கிள் மீது கேக் வைத்து கத்தியால் கேக் வெட்டியும், பட்டாசுகளை வெடிக்கச்செய்து அதை சாலையில் வீசியதும் தெரியவந்தது.
2 வாலிபர்கள் கைது
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பூவரசன், சிவா ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
மேலும் இது போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் எச்சரித்துள்ளார்.
நடுரோட்டில் பட்டா கத்தியால் கேக் வெட்டி, பட்டாசு வெடித்து பிறந்தநாள் கொண்டாடிய சம்பவம் காட்பாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.