சேலத்தில் இரட்டிப்பு பணம் தருவதாக கூறி ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி-2 பேர் கைது


சேலத்தில் இரட்டிப்பு பணம் தருவதாக கூறி ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி-2 பேர் கைது
x

சேலத்தில் இரட்டிப்பு பணம் தருவதாக கூறி ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

சேலம்

ரியல் எஸ்டேட் அதிபர்

சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்தவர் செல்வராஜ். விவசாயி. ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். இவருக்கும், சேலம் உடையாப்பட்டியை சேர்ந்த சண்முகம் (வயது 45), தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை சேர்ந்த பிரபு (41) மற்றும் சக்திவேல், கோபி ஆகியோருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இவர்கள் 3 பேரும் சேர்ந்து செல்வராஜை செல்போனில் தொடர்பு கொண்டு தங்களிடம் கருப்பு பணம் உள்ளது. எனவே ரூ.10 லட்சம் கொடுத்தால் இரட்டிப்பாக ரூ.20 லட்சம் தருகிறோம் என்று கூறி உள்ளனர்.

இதையடுத்து செல்வராஜ் பணம் எங்கு கொண்டு வர வேண்டும் என்று கேட்டார். அதற்கு சேலம் அரியானூர் பகுதிக்கு பணத்துடன் வருமாறு அவர்கள் கூறி உள்ளனர். இதை நம்பி செல்வராஜ் நேற்று முன்தினம் ரூ.10 லட்சத்துடன் காரில் சேலம் அரியானூர் வந்தார். ஏற்கனவே அங்கு 3 பேரும் மற்றொரு காரில் வந்து காத்திருந்தனர்.

வெள்ளை தாள்கள்

பின்னர் செல்வராஜ், அவர்கள் 3 பேரிடம் ரூ.10 லட்சத்தை கொடுத்தார். அதை பெற்று கொண்ட அவர்கள் ஒரு சூட்கேசை செல்வராஜிடம் கொடுத்து அதில் ரூ.20 லட்சம் உள்ளது என்று கூறி விட்டு சிறிது நேரத்தில் அங்கிருந்து காரில் சென்றனர். பின்னர் செல்வராஜ் தனது காரில் அமர்ந்தவுடன் சூட்கேசை திறந்து பார்த்தார்.

அதில் மேல் கட்டில் ஒரே ஒரு ரூ.500 மட்டும் இருந்தது. அதற்கு கீழ் பகுதியில் அனைத்தும் வெள்ளை தாள்கள் இருந்தன. இதனால் பணம் மோசடி நடந்ததை அறிந்து அவர் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் கொண்டலாம்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபு, சண்முகம் ஆகிய 2 பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள சக்திவேல் உள்பட 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

இரட்டிப்பு பணம்

இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'மோசடியில் ஈடுபட்ட 3 பேரும் ஏற்கனவே செல்வராஜிடம் ரூ.10 லட்சம் பெற்று கொண்டு ரூ.12 லட்சம் கொடுத்துள்ளனர். பின்னர் 2-வது முறையாக இரட்டிப்பு பணம் தருவதாக கூறி ரூ.10 லட்சம் மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இந்த கும்பல் மேலும் யாரிடமாவது இது போன்ற பண மோசடியில் ஈடுபட்டு உள்ளார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்' என்றனர்.


Next Story