குன்னூரில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது


தினத்தந்தி 6 Feb 2023 12:15 AM IST (Updated: 6 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

குன்னூரில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

நீலகிரி

ஊட்டி

குன்னூரில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கடையின் மேற்கூரை உடைப்பு

நீலகிரி மாவட்டம் குன்னூர் பெட்போர்டு பகுதியில் ராஜாஜி நகரை சேர்ந்த காஜா மைதீன் என்பவர் பேன்சி கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த 30-ந் தேதி இரவு வழக்கம் போல் வியாபாரம் முடிந்து கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். மறுநாள் காலையில் கடையை திறந்து பார்த்தபோது கடையின் மேற்கூரை பிரிக்கப்பட்டு இருந்தது. கடையில் அவர் பெரிய அளவில் பணம் வைக்காததால் அங்கிருந்த டி.வி.டி. பிளேயர் மற்றும் ஆயிரம் ரூபாயை மட்டும் காணவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த காஜாமைதீன் இதுகுறித்து மேல் குன்னூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

2 பேர் கைது

இதையடுத்து அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். இதில் மர்ம நபர்களின் நடமாட்டம் இருப்பது தெரியவந்தது. ஆனாலும் அவர்களின் முகம் மறைக்கப்பட்டு இருந்ததால் சரியாக தெரியவில்லை. இதையடுத்து அந்த பகுதியில் இருந்த வேறு சில கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். இதில் அந்தப் பகுதியில் உள்ள பேக்கரியில் ஊழியர்களாக பணியாற்றிய கிருஷ்ணகிரி மாவட்டம் அச்சமங்கலத்தை சேர்ந்த சீனிவாசன் (வயது 25), யுவராஜ் (23) என்பது தெரிய வந்தது.

இதை தொடர்ந்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். இதற்கிடையே அந்த பகுதியில் கடந்த சில நாட்களாக கடைகளில் பூட்டை உடைக்காமல் தொடர் திருட்டு நடந்து வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த கடை உரிமையாளர்கள் பூட்டுகளை மற்றும் மாற்றி வந்து உள்ளனர். குறைந்த அளவு பணம் மட்டுமே காணாமல் போனதால் கடைக்காரர்கள் புகார் அளிக்காமல் இருந்துள்ளனர். ஆனாலும் திருட்டு சம்பவத்திற்கு தீர்வு இல்லாமல் இருந்தது. விசாரணையில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்தது இவர்கள் என்பது தெரிய வந்தது. இவர்கள் பகலில் பேக்கரி ஊழியர்களாக பணியாற்றி கொண்டே நோட்டமிட்டு இரவு நேரத்தில் திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளனர். எனவே மற்ற கடை உரிமையாளர்களும் திருடு போயிருந்தால் இது குறித்து புகார் அளிக்கலாம் என்று போலீசார் அறிவித்துள்ளனர்.


Next Story