மல்லூர் அருகே கார் திருடிய 2 பேர் கைது
மல்லூர் அருகே கார் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
பனமரத்துப்பட்டி:
மல்லூர் அருகே பாலாம்பட்டி கிராமம் ஆட்டையாம்பட்டி ரோட்டில் வசித்து வருபவர் தமிழ்ச்செல்வன் (வயது 29). இவர், சொந்தமாக 2 கார்களை வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறார். சம்பவத்தன்று தனது வீட்டின் முன்பு கார்களை நிறுத்தி விட்டு தூங்க சென்றார். மறுநாள் காலையில் பார்த்த போது ஒரு காரை காணவில்லை. இதுகுறித்து மல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
சேலம் ரூரல் போலீஸ் சூப்பிரண்டு தையல்நாயகி தலைமையிலான தனிப்படை போலீசார் கார் திருடியவர்கள் குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் கிராமம் சர்க்கார் தோப்பு பகுதியை சேர்ந்த சுரேஷ் (32), கடலூர் மாவட்டம் சிதம்பரம் தண்டேஸ்வரா நல்லூரில் உள்ள பத்மாவதி நகரை பிரபு (24) ஆகிய இருவரும் காரை திருடியது தெரிய வந்தது. உடனே போலீசார் இருவரையும் கைது செய்தனர். கைதான இருவரும் திருச்செங்கோட்டில் தங்கி இருந்து பெயிண்டு வேலை செய்து வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. அவர்களிடம் இருந்த கார் மீட்கப்பட்டது.