பசுமாடுகள் திருடிய 2 பேர் கைது


பசுமாடுகள் திருடிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 2 July 2023 10:55 PM IST (Updated: 3 July 2023 4:01 PM IST)
t-max-icont-min-icon

நாட்டறம்பள்ளி அருகே பசுமாடுகள் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருப்பத்தூர்

நாட்டறம்பள்ளி அடுத்த ஆத்தூர்குப்பம் ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட சின்ன ஜங்களாபுரம் பகுதியை சேர்ந்தவர் சந்திரபோஸ் (வயது 73). கடந்த 2 தினங்களுக்கு முன்பு இவரது வீட்டின் அருகே கட்டி வைத்து இருந்த 2 பசுமாடுகளை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.

இதுகுறித்து அவர் நாட்டறம்பள்ளி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் சந்திரபோஸ் உறவினருடன் ஆந்திர மாநிலம் குப்பம் அருகே சந்திரபுரம் பகுதியில் நடைபெறும் மாட்டு சந்தைக்கு சென்று பார்த்தபோது தனது மாடு இருப்பதை உறுதி செய்தார். இதையடுத்து மாடுகளை விற்பனை செய்ய இருந்து 2 பேரை பிடித்து நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அவர்களிடம் இன்ஸ்பெக்டர் மலர், சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் ஜங்கலாபுரம் பகுதியைச் சேர்ந்த பெருமாள் மகன் அன்பரசன் (29) மற்றும் அதே பகுதியை சேர்ந்த தங்கமணி மகன் இமான் (25) என தெரிய வந்தது. இதனையடுத்து அவர்களிடம் இருந்து ரூ.8 லட்சம் மதிப்புள்ள மினிவேன் மற்றும் 2 பசுமாடுகளை பறிமுதல் செய்தனர். மேலும் 2 பேரை போலீசார் கைது செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story