அன்புஜோதி ஆசிரமத்தில் திருடிய 2 பேர் கைது


அன்புஜோதி ஆசிரமத்தில் திருடிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 10 Jun 2023 12:15 AM IST (Updated: 10 Jun 2023 4:00 PM IST)
t-max-icont-min-icon

அன்புஜோதி ஆசிரமத்தில் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

விழுப்புரம்

விக்கிரவாண்டி:

விக்கிரவாண்டி அருகே குண்டலப்புலியூரில் அன்புஜோதி ஆசிரமத்தை கேரளாவை சேர்ந்த ஜூபின்பேபி(வயது 45), இவரது மனைவி மரியா ஜூபின்(43) ஆகியோர் நடத்தி வந்தனர். ஆசிரமத்தில் இருந்த மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் கொடுமை செய்யப்பட்டதாகவும், பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாகவும், சிலர் மாயமானதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜூபின் பேபி உள்பட 8 பேரை கைது செய்தனர். மேலும் சி.பி.சி.ஐ.டி. போலீசார், கடந்த மார்ச் மாதம் ஆசிரமத்தை பூட்டி சீல் வைத்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

2 பேர் கைது

இந்த நிலையில் ஆசிரமத்தின் பின்பக்க கேட் பூட்டை மர்மநபர்கள் நேற்று முன்தினம் உடைத்து உள்ளே புகுந்து, ஒரு மோட்டார் சைக்கிளை திருடிச்சென்றனர். இது பற்றி கெடார் போலீசில் கிராம நிர்வாக அலுவலர் மணிபாலன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மேலும் சூரப்பட்டு அருகே கஞ்சனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேகர், கெடார் சப்-இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி, அதில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், உலகலாம்பூண்டியைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் முத்து(36), செஞ்சி அருகே உள்ள கோ.மோட்டூர் தர்மலிங்கம் மகன் ராமன்(28) ஆகியோர் என்பதும், ஆசிரமத்தின் பின்பக்க கேட் பூட்டை உடைத்து மோட்டார் சைக்கிளை திருடியதும் தெரிய வந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் சரக்கு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story