பேராசிரியையிடம் நகை பறித்த 2 பேர் கைது
மார்த்தாண்டத்தில் கல்லூரி பேராசிரியையிடம் 16½ பவுன் நகையை பறித்து சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
குழித்துறை:
மார்த்தாண்டத்தில் கல்லூரி பேராசிரியையிடம் 16½ பவுன் நகையை பறித்து சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கல்லூரி பேராசிரியை
மார்த்தாண்டம் அருகே உள்ள காப்புக்காடு காட்டுவிளையை சேர்ந்தவர் ஜெனிஸ். இவருடைய மனைவி மெர்லின் டயானா (வயது 36), தேனியில் உள்ள ஒரு தனியார் பெண்கள் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார்.
விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த இவர் கடந்த 4-ந் தேதி இரவு தனது கணவருடன் மோட்டார் சைக்கிளில் மார்த்தாண்டத்துக்கு சென்றார். அங்கு பொருட்கள் வாங்கி விட்டு கணவன், மனைவி இருவரும் மீண்டும் மோட்டார் சைக்கிளில் வீடு நோக்கி புறப்பட்டனர்.
16½ பவுன் நகை பறிப்பு
மார்த்தாண்டம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பு சென்றடைந்த போது இருவரையும் பின் தொடர்ந்தபடி மோட்டார் சைக்கிளில் 2 மர்மஆசாமிகள் வந்தனர். அந்த சமயத்தில் திடீரென பேராசிரியை மெர்லின் டயானாவின் கழுத்தில் கிடந்த 16½ பவுன் நகையை பறித்து விட்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.
இதுகுறித்து மெர்லின் டயானா மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் 2 தனிப்படை அமைக்கப்பட்டு அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆசாமிகளை தேடி வந்தனர்.
2 பேர் கைது
இந்தநிலையில் நகை பறித்த ஆசாமிகள் நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. இதையடுத்து மேலப்பாளையத்தை சேர்ந்த ஓட்டல் ஊழியரான செய்யது அலிகான் (24) மற்றும் இறைச்சி கடையில் வேலை செய்த அப்துல் ராசிக் (21) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.தொடர்ந்து பேராசிரியையிடம் இருந்து பறித்த நகையும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த கும்பலுக்கு தலைவனாக ஷேக் ஜமால் மைதீன் என்பவர் செயல்பட்டது விசாரணையில் அம்பலமானது. எனவே அவரையும் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
இந்த கும்பல் இதுபோல பல பெண்களிடம் நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாகவும், அவர்கள் அந்த தங்க நகைகளை விற்று அதில் கிடைக்கும் பணத்தில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்துள்ளனர். அதாவது, கொடைக்கானல் போன்ற சுற்றுலாத் தலங்களுக்கு சென்று மது அருந்திவிட்டு ஜாலியாக இருந்துள்ளது விசாரணையில் அம்பலமாகி உள்ளது.