குத்துவிளக்கு திருடிய 2 பேர் கைது
கருங்கல் அருகே நண்பர் வீட்டில் குத்துவிளக்கு திருடிய 2 பேர் கைது
கருங்கல்,
கருங்கல் அருகே உள்ள மாங்கரை கோட்டவிளையைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 43). இவருடைய நண்பர் மாங்கரை முண்டவிளையைச் சேர்ந்த மரிய செல்வின் (42). சம்பவத்தன்று விஜயகுமாரின் வீட்டில் இருந்த 7½ கிலோ எடை உள்ள வெண்கல குத்துவிளக்கு மாயமானது. யாரோ மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து விஜயகுமார் கருங்கல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் சனல்குமார் தலைமையிலான போலீசார் கருங்கல் சுற்றுவட்டார பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, மாங்கரை பகுதியில் சந்தேகப்படும் வகையில் நின்ற 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த மரிய செல்வின்(42), மரிய சேவியர் என்பதும், நண்பரான விஜயகுமார் வீட்டில் குத்துவிளக்கு திருடியதும், கடந்த மாதம் 9-ந்தேதி கருங்கல் அருகே திருஞானபுரம் சிறுவர் பூங்காவில் நின்ற சந்தன மரத்தை வெட்டியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்தனர்.