வட்டி கேட்டு மிரட்டிய 2 பேர் கைது
கோத்தகிரி பகுதியில் வட்டி கேட்டு மிரட்டிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் ரூ.5½ லட்சம், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கோத்தகிரி
கோத்தகிரி பகுதியில் வட்டி கேட்டு மிரட்டிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் ரூ.5½ லட்சம், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
வட்டி கேட்டு மிரட்டல்
கோத்தகிரி அருகே எம்.கைகாட்டி பாண்டியன் நகரை சேர்ந்தவர் அருளானந்தம்(வயது 27). டிரைவர். இவர் கொரோனா காலத்தில் சரிவர வேலை கிடைக்காமல் இருந்ததால், கோத்தகிரி டானிங்டன் காந்தி நகரை சேர்ந்த அஜித் குமார்(29) என்பவரிடம் காலியான புரோ நோட் மற்றும் பத்திரத்தில் கையெழுத்திட்டு வட்டிக்கு ரூ.20 ஆயிரம் வாங்கினார். அதன்பின்னர் முறையாக வட்டியை செலுத்தி வந்த நிலையில், குடும்ப சூழல் காரணமாக கடந்த 6 மாதங்களாக வட்டி கட்டவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து டானிங்டன் பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்ற அருளானந்தத்தை வழிமறித்த அஜித்குமார் வட்டி கேட்டு மிரட்டல் விடுத்தார். இது குறித்து அருளானந்தம் கோத்தகிரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் போலீசார் அஜித்குமாரை அழைத்து விசாரித்தனர். மேலும் அவரிடம் இருந்து ரூ.5 லட்சத்து 47 ஆயிரத்து 100 ரொக்கம், தொகை எழுதப்படாமல் கையெழுத்து பெறப்பட்ட 15 காசோலைகள், புரோ நோட்டுக்கள், பத்திரங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர்.
கைது
இதேபோன்று காத்துக்குளி கிராமத்தில் கடை நடத்தி வரும் வியாபாரியான ராஜன் என்பவர் தனது அறுவை சிகிச்சை செலவுக்காக கட்டபெட்டு பகுதியை சேர்ந்த மதி என்பவரிடம் ரூ.10 ஆயிரம் வட்டிக்கு பணம் வாங்கினார். வாரம் தவறாமல் வட்டி செலுத்தி வந்த நிலையில், வியாபாரம் இல்லாததால் கடந்த 1½ மாதமாக வட்டி செலுத்தவில்லை என்று தெரிகிறது. இதனால் அவரது கடைக்கு சென்ற மதி பொருட்களை தூக்கி வீசி தகராறு செய்தார். மேலும் வட்டி கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிந்து, மதியை கைது செய்தனர். அவரிடம் இருந்த 5 லெட்ஜர் நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதையடுத்து கைது செய்யப்பட்ட 2 பேரும் கோத்தகிரி மாஜிஸ்திரேட் வனிதா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.