திண்டிவனம் அருகே ஜாமீனில் வந்தவரை அரிவாளால் வெட்டி கொல்ல முயற்சி 2 பேர் கைது
திண்டிவனம் அருகே ஜாமீனில் வந்தவரை அரிவாளால் வெட்டி கொல்ல முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
திண்டிவனம்,
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தீர்த்தகுளம் பகுதியை சேர்ந்தவர் சுப்புராயன் மகன் பெருமாள்(வயது 49). இவர் தற்போது திண்டிவனம் அடுத்த சாரம் ரெட்டியார் தெருவில் வசித்து வருகிறார்.
கடந்த மாதம் 22-ந்தேதி லாட்டரி சீட்டு விற்றதாக பெருமாளை ஒலக்கூர் போலீசார் கைது செய்து திண்டிவனம் சிறையில் அடைத்தனர். இதையடுத்து அவர் கடந்த 26-ந்தேதி ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பெருமாள், தனது நண்பர்கள் பவுல்ராஜ் என்கிற பவுல், ஜார்ஜ் மற்றும் சிறையில் பழக்கம் ஏற்பட்ட மருதமலை, எறும்பு என்கிற ரமேஷ் ஆகியோருடன் ஒரு காரில் திண்டிவனம்-சென்னை சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகில் மது அருந்தினார்.
பின்னர் பவுல்ராஜை மட்டும் அங்கேயே விட்டு, விட்டு மற்ற 4 பேரும், அதே காரில் சலவாதி பகுதியில் உள்ள ஓட்டலுக்கு சாப்பிட சென்றனர்.
அரிவாள் வெட்டு
இரவு 11.30 மணியளவில் அனைவரும் ஓட்டலில் சாப்பிட்டு விட்டு, காரில் ஏறுவதற்காக வந்தனர். அப்போது அங்கு ஈச்சேரி கிராமத்தை சேர்ந்த சேட்டு என்கிற ஜெயக்குமார், முருங்கப்பாக்கம் பகுதியை சேர்ந்த அன்பு என்கிற அன்புராஜ்(31), சாரம் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திர பிரசாத்(24) ஆகியோர் அவர்களை காரில் ஏற முடியாத அளவிற்கு வழிமறித்து நின்று பேசி கொண்டிருந்தனர்.
இதைபார்த்த பெருமாள் தரப்பை சேர்ந்த மருதமலை, அவர்களை தள்ளி நிற்குமாறு கூறினார். இதனால் ஜெயக்குமார் தரப்பினருக்கும், பெருமாள் தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது மீன் வெட்டுவதற்காக பெருமாள் காரில் வாங்கி வைத்திருந்த கத்தியை பார்த்த ஜெயக்குமார் தரப்பினர் அதை எடுத்து பெருமாளை சரமாரியாக வெட்டி, விட்டு தப்பி ஓடினார்கள். இதைபார்த்த ஓட்டலுக்கு வந்தவர்கள் அலறியடித்தப்படி சிதறி ஓடினார்கள்.
2 பேர் கைது
இதற்கிடையே பலத்த காயமடைந்த பெருமாள், ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். அவரை உடன் வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், அவர் மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்த புகாரின் பேரில் ஜெயக்குமார் உள்பட 3 பேர் மீது கொலை முயற்சி பிரிவின் கீழ் ரோஷணை போலீசார் வழக்குப்பதிவு செய்து அன்புராஜ், ராஜேந்திர பிரசாத் ஆகிய 2 பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ஜெயக்குமாரை தேடி வருகின்றனர். ஏற்கனவே ஜெயக்குமாருக்கும், பெருமாளுக்கும் இடையே லாட்டரி, கஞ்சா விற்பது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.