தொழிலாளி கொலை வழக்கில் 2 பேர் கைது
பழனியில் நடந்த தொழிலாளி கொலை வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
பழனி குரும்பப்பட்டியை சேர்ந்த கோபால் மகன் வடிவேல் (வயது 27). கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் இவர், பழனி பஸ்நிலையம் அருகே நடந்து வந்தபோது 2 பேர் அவரை சுற்றி வளைத்து அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். பழனியில் பட்டப்பகலில் நடந்த இந்த கொலை சம்பவம் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த கொலை குறித்து பழனி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீஸ் துணை சூப்பிரண்டு சிவசக்தி சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டார். தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், முன்விரோதத்தில் வடிவேலுவின் நண்பர்களான பழனி அடிவாரம் பகுதியை சேர்ந்த மாரிமுத்து (35), அழகாபுரியை சேர்ந்த சுரேஷ் (29) ஆகியோர் வடிவேலுவை வெட்டி கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து சுரேஷ் உள்பட 2 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.
இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், வடிவேல், மாரிமுத்து, சுரேஷ் ஆகிய 3 பேரும் நண்பர்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் 3 பேரும் கலந்து கொண்டனர். அப்போது வடிவேல் மற்றும் சுரேஷ், மாரிமுத்து ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. மாரிமுத்து, சுரேஷ் ஆகியோரை வடிவேல் அவதூறாக பேசினார். இதனால் ஆத்திரம் அடைந்த மாரிமுத்து, சுரேஷ் ஆகியோர் நேற்று முன்தினம் வடிவேலை வெட்டி கொலை செய்தனர் என்றனர்.