நாட்டு வெடிகுண்டு தயாரித்த சிறுவன் உள்பட 2 பேர் கைது


தூத்துக்குடி அருகே நாட்டு வெடிகுண்டு தயாரித்த சிறுவன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி அருகே நாட்டு வெடிகுண்டு தயாரித்த சிறுவன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாட்டு வெடிகுண்டு

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சிலரது செல்போன் வாட்ஸ்அப்பில் ஒரு வீடியோ வைரலாக பரவியது. அதில் ஒரு குளத்தின் அருகே நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டு, அது பலத்த சப்தத்துடன் வெடிக்கும் காட்சி இருந்தது. இது குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி ஊரக உதவி போலீஸ் சூப்பிரண்டு சந்தீஷ் மற்றும் புதுக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் புதுக்கோட்டை அருகே உள்ள பிரகாஷ்நகர் குளத்தின் அருகே அந்த நாட்டு வெடிகுண்டு தயாரிக்கப்பட்டு, அங்கேயே வீசி வெடிக்க வைத்து இருப்பதும், இதனை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டு இருப்பதும் தெரியவந்தது.

சிறுவன் உள்பட 2 பேர் சிக்கினர்

இது தொடர்பாக புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமலட்சுமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில், ஒரு 16 வயது சிறுவன் பட்டாசில் உள்ள மருந்தை எடுத்து நாட்டு வெடிகுண்டு போன்று தயாரித்து, வெடிக்க செய்தது தெரியவந்து உள்ளது. இதனை அவரது நண்பர் குரும்பூரை சேர்ந்த முருகபெருமாள் (வயது 23) என்பவர் வீடியோ பதிவு செய்ததும் தெரியவந்தது.

போலீசார் தீவிர விசாரணை

இதைத் தொடர்ந்து புதுக்கோட்டை போலீசார் முருகபெருமாள் மற்றும் சிறுவனையும் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் இருந்த செல்போன்களை பறிமுதல் செய்தனர். எதற்காக வெடிகுண்டு தயாரித்தனர் என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story