கஞ்சா வைத்திருந்த சமையல் மாஸ்டர் உள்பட 2 பேர் கைது
ஏலகிரி மலையில் கஞ்சா வைத்திருந்த சமையல் மாஸ்டர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஏலகிரி மலை போலீஸ் நிலைய சப் -இன்ஸ்பெக்டர் மணி தலைமையில் போலீசார் நேற்று ஏலகிரி மலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அத்தனாவூர் பஸ் நிறுத்தம் அருகே சந்தேகத்தின் பேரில் சுற்றி திரிந்த 2 பேரை பிடித்து சோதனை செய்தனர். அதில் அவர்கள் கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர்களிடமிருந்து தலா 25 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
மேலும் அவர்களிடம் நடத்தியவிசாரணையில் அவர்கள் ஒடிசா மாநிலம் ரசூல்புரி பகுதியைச் சேர்ந்த சேக் பகீர் மகன் சேக் பரூக் (வயது 25) என்பதும், ஏலகிரி மலையில் உள்ள தனியார் ஓட்டலில் சமையல் மாஸ்டராக வேலைபார்த்து வந்ததும் தெரியவந்தது. மற்றொருவர் ஜோலார்பேட்டை சந்தைகோடியூர் வேலு செட்டி தெருவை சேர்ந்த ராஜா என்பவரது மகன் தருண் (24) என தெரிய வந்தது. அவர்கள் மீது ஏலகிரி மலை போலீசார் வழக்குப்பதிரு செய்து இருவரையும் கைது செய்தனர்.