தூக்குப்போட்டு 2 பேர் தற்கொலை
விருதுநகர் அருகே தூக்குப்போட்டு 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
விருதுநகர்,
விருதுநகர் அருகே தூக்குப்போட்டு 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
பெயிண்டர்
விருதுநகர் அருகே குல்லூர் சந்தையில் உள்ள இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 47). பெயிண்டரான இவர் வேலை முடிந்து வீட்டுக்கு வந்தவுடன் வீட்டில் மனைவி கிருஷ்ணவேணி (37) மற்றும் குழந்தைகளுடன் மதுபோதையில் பிரச்சினை செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.
இந்நிலையில் சம்பவத்தன்று வேலை முடிந்து வீட்டிற்கு வந்த ராமகிருஷ்ணன் வீட்டில் குழந்தைகளை அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் கிருஷ்ணவேணி தனது குழந்தையுடன் வீட்டிற்கு வெளியே வந்து சூலக்கரை போலீசுக்கு போனில் புகார் செய்தார். இதனால் ஆத்திரமடைந்த ராமகிருஷ்ணன் வீட்டிற்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டார். நீண்ட நேரமாகியும் கதவு திறக்காததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ராமகிருஷ்ணன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி கிருஷ்ணவேணி கொடுத்த புகாரின் பேரில் சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மற்றொரு சம்பவம்
விருதுநகர் அருகே உள்ள பெரியவள்ளிக்குளம் ராமசாமிபுரத்தை சேர்ந்தவர் பாரதிதேவி. இவரது மகன் பிரதீப் குமார் (22). மதுப்பழக்கத்திற்கு அடிமையான இவர் சிகிச்சைக்காக மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்டிருந்தார். 7 மாதங்களாக மறுவாழ்வு மையத்தில் இருந்த அவர் கடந்த 7 நாட்களுக்கு முன்பு வீட்டிற்கு வந்துவிட்டார்.
இந்நிலையில் வீட்டில் யாருடனும் பேசாமல் மது குடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பிரதீப்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி பாரதிதேவி கொடுத்த புகாரின் பேரில் சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.