இண்டூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்: சாப்ட்வேர் என்ஜினீயர் உள்பட 2 பேர் பலி-2 பேர் படுகாயம்


இண்டூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்: சாப்ட்வேர் என்ஜினீயர் உள்பட 2 பேர் பலி-2 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 24 Oct 2022 12:15 AM IST (Updated: 24 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

பாப்பாரப்பட்டி:

இண்டூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் சாப்ட்வேர் என்ஜினீயர் உள்பட 2 பேர் பலியாகினர்.

சாப்ட்வேர் என்ஜினீயர்

தர்மபுரி மாவட்டம் இண்டூர் அருகே உள்ள எர்ரபையனஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மனோகரன். இவருடைய மகன் ராஜசேகர் (வயது 32). இவர் பெங்களூருவில் உள்ள ஒரு நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக ராஜசேகர், கடந்த சில நாட்களுக்கு முன்பு பெங்களூருவில் இருந்து சொந்த ஊரான எர்ரபையனஅள்ளி கிராமத்துக்கு மனைவி, மகனுடன் வந்தார்.

மோட்டார் சைக்கிள்கள் மோதல்

இந்தநிலையில் ராஜசேகர் நேற்று முன்தினம் பென்னாகரத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் இரவு அங்கிருந்து தர்மபுரி நோக்கி சென்று கொண்டிருந்தார். அவருடன் பென்னாகரத்தில் ஜவுளிக்கடை நடத்தி வரும் கருப்பையனஅள்ளியை சேர்ந்த திருமுருகன் (25) மோட்டார் சைக்கிளில் சென்றார்.

இதேபோல் பாறைக்கொட்டாய் கிராமத்தை சேர்ந்த சின்னசாமி மகன் பழனி (23), நாகர்கூடல் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் மகன் முத்துக்குமார் (25) என்பவருடன் தர்மபுரியில் இருந்து பென்னாகரம் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். மல்லாபுரம் பஸ் நிறுத்தம் அருகே ராஜசேகர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும், பழனி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் பயங்கரமாக மோதி கொண்டன.

2 பேர் பலி

இதில் தூக்கி வீசப்பட்ட என்ஜினீயர் ராஜசேகர், கட்டிட மேஸ்திரி பழனி ஆகியோர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஜவுளிக்கடை உரிமையாளர் திருமுருகன், லாரி டிரைவர் முத்துகுமார் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் இண்டூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று விபத்தில் படுகாயம் அடைந்த திருமுருகன், முத்துகுமாரை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பலியான ராஜசேகர், பழனி ஆகியோர் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் என்ஜினீயர் மற்றும் கட்டிட மேஸ்திரி பலியான சம்பவம் இண்டூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story