மோட்டார்சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி 2 பேர் பலி
தேவகோட்டை அருகே மோட்டார்சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் பலியாகினர்.
தேவகோட்டை,
தேவகோட்டை அருகே மோட்டார்சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் பலியாகினர்.
மோட்டார்சைக்கிள்கள் மோதல்
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கருமொழி கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன். இவரது மகன் தினேஷ் (வயது 23). இவர் கோடிகோட்டை டோல்கேட்டில் ஊழியராக வேலை செய்து வந்தார். தேவகோட்டை-திருவாடானை அருகே உள்ள பாரூர் கிராமத்தை சேர்ந்த குமார் மகன் கவி (19). இவர் தனது உறவினரான சிறுவண்டல் கிராமத்தை சேர்ந்த பாஸ்கரன் மகன் ஜெகன் (23) என்பவருடன் தேவகோட்டையில் இருந்து திருவாடானை நோக்கி மோட்டார் சைக்கிளில் திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அந்நேரம் புளியாலில் இருந்து தேவகோட்டைக்கு திருச்சி-ராமேசுவரம் சாலையில் தினேஷ் செல்ல முற்பட்டார். அப்போது கவி ஓட்டி வந்த மோட்டார்சைக்கிளும், தினேஷ் ஓட்டி வந்த மோட்டார்சைக்கிளும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது.
2 பேர் பலி
இந்த விபத்தில் கவியும், தினேசும் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். ஜெகன் படுகாயம் அடைந்தார். அவரை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தேவகோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தேவகோட்டை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கவி, தினேசின் உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.