தடுப்புசுவரில் மோட்டார்சைக்கிள் மோதி புதுமாப்பிள்ளை உள்பட 2 பேர் பலி- கண்களை தானம் செய்த குடும்பத்தினர்
தடுப்பு சுவரில் மோட்டார்சைக்கிள் மோதி புதுமாப்பிள்ளை உள்பட 2 வாலிபர்கள் பலியானார்கள். அவர்களுடைய கண்களை குடும்பத்தினர் தானம் செய்தனர்.
திருப்புவனம்
தடுப்பு சுவரில் மோட்டார்சைக்கிள் மோதி புதுமாப்பிள்ளை உள்பட 2 வாலிபர்கள் பலியானார்கள். அவர்களுடைய கண்களை குடும்பத்தினர் தானம் செய்தனர்.
தடுப்பு சுவரில் மோதல்
சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே உள்ள கானூர் கிராமத்தை சேர்ந்தவர் கவின்ராஜ்காந்த் (வயது 23). இவருக்கு திருமணம் ஆகி 3 மாதம் ஆகிறது. திருப்பாச்சேத்தியை சேர்ந்தவர் சசிகரன் (22). இவரும் கவின்ராஜ்காந்த்தும் நண்பர்கள் ஆவர்.
நேற்று முன்தினம் இரவு சசிகரனுக்கு சொந்தமான மோட்டார்சைக்கிளில் அவரும், கவின்ராஜ்காந்த்தும் திருப்புவனத்தில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சாப்பிட சென்றனர்.
பின்னர் அங்கிருந்து மீண்டும் திருப்பாச்சேத்தி நோக்கி சென்றனர். சசிகரன் மோட்டார்சைக்கிளை ஓட்டினார். கவின்ராஜ்காந்த் பின்னால் அமர்ந்திருந்தார். நான்கு வழிச்சாலையில் வன்னிகோட்டை விலக்கு அருகே வந்தபோது சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் எதிர்பாராத விதமாக மோட்டார்சைக்கிள் மோதியது.
2 பேர் சாவு
இந்த விபத்தில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். அதில் தலையில் பலத்த காயமடைந்த இருவரையும் அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த போது கவின்ராஜ்காந்த்தும், சசிகரனும் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர்.
இந்த விபத்து குறித்து திருப்புவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆதிலிங்கம்போஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இதற்கிடையே விபத்து நடந்த இடத்தை மானாமதுரை துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். மேலும் விபத்தில் இறந்த இருவருடைய கண்களையும் தானம் செய்ய அவர்களது குடும்பத்தினர் முன்வந்தனர். அதன்படி இறந்த வாலிபர்களின் கண்களை மதுரை ஆஸ்பத்திரி டாக்டர்கள் பெற்றுக்கொண்டனர்.