விபத்தில் 2 பேர் பலி
விபத்தில் 2 பேர் பலி
தஞ்சையில் வெவ்வேறு இடங்களில் நடந்த விபத்தில் 2 பேர் பலியானார்கள்.
தடுப்பில் மோதியது
தஞ்சை கரந்தை செல்லியம்மன் கோவில் தெருவை சேர்ந்த இளவரசன் மகன் இளஞ்செழியன் (வயது 26). இவர் நேற்று காலை மருத்துவக்கல்லூரி சாலையில் தஞ்சையை நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
பெரிய கோவில் அருகே உள்ள மேம்பாலத்தில் சென்ற போது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் உள்ள தடுப்பில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட இளஞ்செழியன் பாலத்தின் கீழே அணுகு சாலையில் விழுந்தார்.
பலத்த காயம்
இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவஇடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் தஞ்சை போக்குவரத்து புலனாய்வு போலீஸ் நிலைத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளஞ்செழியன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரசு பஸ்
இதேபோல் கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியை சேர்ந்த பரிமளம் (80). அலங்கார மின்விளக்கு பொருத்தும் தொழிலாளியான இவர் தஞ்சைக்கு வேலைக்காக வந்தார். நேற்று இரவு தஞ்சை கீழவாசல் பகுதியில் நின்று கொண்டிருந்தபோது நிலைதடுமாறி சாலையில் விழுந்தார். அப்போது அந்த வழியாக தஞ்சையில் இருந்து மணக்கால் பகுதிக்கு சென்ற அரசு பஸ் பரிமளம் தலையில் ஏறியது.
இதில் தலை நசுங்கி அவர் சம்பவ இடத்தில் பலியானார். இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் போக்குவரத்து புலனாய்வு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவஇடத்திற்கு சென்று பரிமளத்தின் உடலை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.