கார் தலைகுப்புற கவிழ்ந்து பெண் வக்கீல் உள்பட 2 பேர் பலி
கொடைரோடு அருகே கார் தலைகுப்புற கவிழ்ந்த விபத்தில் பெண் வக்கீல் உள்பட 2 பேர் பலியாகினர்.
கொடைரோடு அருகே கார் தலைகுப்புற கவிழ்ந்த விபத்தில் பெண் வக்கீல் உள்பட 2 பேர் பலியாகினர்.
கார் கவிழ்ந்தது
விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்தவர் மைக்கேல் பாரதி (வயது 53). வக்கீல். இவரது ஜூனியர் வக்கீல் மோனிகா (25). இவர்கள் 2 பேரும் வழக்கு தொடர்பாக வாதாடுவதற்கு சேலம் கோர்ட்டுக்கு இன்று சென்றனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து காரில் சாத்தூர் நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்தனர். காரை சாத்தூரை சேர்ந்த அசோக்குமார் (35) ஓட்டினார்.
இந்தநிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே திண்டுக்கல்-மதுரை நான்கு வழிச்சாலையில் உள்ள ஜெ.மெட்டூர் மேம்பாலத்தில் அவர்கள் வந்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தறிகெட்டு ஓடியது. ஒருகட்டத்தில் அந்த கார் நிலைதடுமாறி சாலையின் நடுவே இருந்த தடுப்புச்சுவரில் மோதி, மறுபக்க சாலையில் தலைகுப்புற கவிழ்ந்தது. அந்த நேரத்தில் அந்த வழியாக வாகனங்கள் எதுவும் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
பெண் வக்கீல் பலி
இந்த விபத்தில் காரில் வந்த மோனிகா (25) சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். மைக்கேல் பாரதி, டிரைவர் அசோக்குமார் ஆகியோர் படுகாயத்துடன் உயிருக்கு போராடினர். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர், காயமடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அசோக்குமார் உயிரிழந்தார். மைக்கேல் பாரதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து அம்மையநாயக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகலட்சுமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக திண்டுக்கல்-மதுரை நான்கு வழிச்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் உடனடியாக சாலையில் கவிழ்ந்த கார் அப்புறப்படுத்தப்பட்டது. அதன்பிறகு போக்குவரத்து சீரானது.
கார் கவிழ்ந்து பெண் வக்கீல் உள்பட 2 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.