புதுமாப்பிள்ளை உள்பட 2 பேர் பலி
இரணியல் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதி கொண்ட விபத்தில் புதுமாப்பிள்ளை உள்பட 2 பேர் பலியானார்கள். திருமண பத்திரிகை கொடுத்து விட்டு வரும் போது இந்த பரிதாப சம்பவம் நடந்தது.
திங்கள்சந்தை,
இரணியல் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதி கொண்ட விபத்தில் புதுமாப்பிள்ளை உள்பட 2 பேர் பலியானார்கள். திருமண பத்திரிகை கொடுத்து விட்டு வரும் போது இந்த பரிதாப சம்பவம் நடந்தது.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறியதாவது:-
புதுமாப்பிள்ளை
இரணியல் அருகே உள்ள நெய்யூர் ஆத்திவிளை காமராஜர் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மகன் பிரதீஷ் (வயது 28). இவர் வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். இவருக்கு வருகிற 1-ந்தேதி திருமணம் நடைபெற இருந்தது. அதற்காக 4 நாட்களுக்கு முன்பு பிரதீஷ் வெளிநாட்டில் இருந்து ஊருக்கு திரும்பினார்.
அவர் நேற்று மதியம் நெய்யூர் பால் தெரு பகுதியை சேர்ந்த ரெஜு (38) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று திருமண பத்திரிகைகளை கொடுத்து விட்டு, இரணியல் கோணம் ரெயில்வே மேம்பாலம் பகுதியில் வந்தனர். மோட்டார் சைக்கிளை பிரதீஷ் ஓட்டினார்.
2 பேர் பலி
அப்போது பொன்மனை காந்திநகர் பகுதியை சேர்ந்த கிறிஸ்துதாஸ் மகன் ராஜசேகர் ( 40) மற்றும் ஈஞ்சக்கோடு பகுதியை சேர்ந்த ராஜன் (48) என்பவரும் எதிரே மோட்டார் சைக்கிளில் வந்தனர். கண் இமைக்கும் நேரத்தில் இரு மோட்டார் சைக்கிள்களும் மோதிக்கொண்டன. இதில் 4 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் பிரதீஷ், ராஜசேகர் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். ரெஜு படுகாயம் அடைந்தார். அவரை உடனே சுங்கான்கடை பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ராஜனை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த விபத்து குறித்து இரணியல் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.. அப்போது ராஜசேகர் மற்றும் ராஜன் ஆகிய இருவரும் முள்வேலி அமைக்கும் பணி செய்து வந்ததும், முட்டம் பகுதியில் முள்வேலி அமைக்கும் பணியை முடித்து விட்டு வந்த போது விபத்தில் சிக்கியதும் தெரிய வந்தது.
திருமணம் நடக்க இருந்த நிலையில் புதுமாப்பிள்ளை பிரதீஷ் விபத்தில் இறந்த சம்பவம் அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.