தனித்தனி விபத்தில்சிறுவன் உள்பட 2 பேர் பலி
தனித்தனி விபத்தில் சிறுவன் உள்பட 2 பேர் பலியாகினர்.
விக்கிரவாண்டி,
கார் மோதல்
விக்கிரவாண்டி அருகே உள்ள வி.மாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனிசாமி(வயது 45). டிராக்டர் டிரைவரான இவர் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் முண்டியம்பாக்கம் சர்க்கரை ஆலையில் இருந்து சொந்த ஊருக்கு புறப்பட்டார். பாப்பனப்பட்டு பஸ் நிறுத்தம் அருகே சாலையை கடக்க முயன்றபோது, அவ்வழியாக வந்த கார் பழனிசாமி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் பழனிசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து விக்கிரவாண்டி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் காத்தமுத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்
விழுப்புரம் அருகே அத்தியூர் திருவாதி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவன் மணி மகன் நிஷாந்தன் (வயது 7). இவன் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று மாலை பள்ளி முடிந்ததும் தனது வீட்டின் அருகில் நின்று விளையாடிக்கொண்டிருந்தான். அந்த சமயத்தில் விழுப்புரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் இருந்து மாணவர்களை அழைத்துக்கொண்டு வந்த வேன், எதிர்பாராதவிதமாக நிஷாந்தன் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த நிஷாந்தனை பெற்றோர் மீட்டு உடனடியாக சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சிறுவன் நிஷாந்தன் பரிதாபமாக இறந்தான். இந்த விபத்து குறித்த புகாரின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.